நுகர்வோர் அதிகாரசபையின் உரிய அனுமதி இன்றி கோதுமை மாவின் விலையை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் அதிகார சபையால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கோதுமை மாவை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்கள் விலையை அதிகரிக்க உரிய அனுமதி வழங்கப்படவில்லை என, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை இரண்டு ரூபாவால் அதிகரித்து கொள்வனவாளர்களுக்கு வழங்குவதாகவும், இதனால் வியாபாரிகளும் மாவுக்கான விலையை அதிகரித்து நுகர்வோருக்கு வழங்குவதாகவும் கூறப்பட்டது.
இதன்படி குறித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், கட்டுப்பாட்டு விலையை மீறி கோதுமை மாவை விற்பனை செய்ய முடியாது எனவும், அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.