என் தாயாரின் மரண சடங்கில் கலந்துகொள்ள எனது இல்லத்துக்கு வந்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சி.வி. விக்னேஸ்வரனுடன் எனக்கு இருப்பதாக, அவர் நினைக்கும் நட்பை பயன்படுத்தி தனக்கும், வடமாகாண முதல்வருக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி தரும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்புக்காக சி.வி.யின் யாழ்ப்பாண வீட்டுக்கோ அல்லது எனது கொழும்பு வீட்டுக்கோ வரவும் தயார் என்றும் கூறினார். என்னிடம் கோட்டாபய கூறியதை நான் விக்னேஸ்வரனிடம் தெரிவித்தேன்.
இதற்கு பிறகு பேசுவதா, இல்லையா என்பதை பற்றி அவர்கள் இருவரும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இதில் இதைவிட தலையிட எனக்கு ஆர்வமும் இல்லை. நேரமும் இல்லை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வியாழக்கிழமை(11) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த காலங்களில் அரசுக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை பார்க்கும்போது, இத்தகைய கலந்துரையாடல்கள் எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்பது பற்றி நியாயமான சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.
ஆனாலும் நடைமுறை நிர்வாக பிரச்சினைகள் பற்றி பேசலாம் என விக்னேஸ்வரன் நினைத்தால் அது நடக்கட்டும். இதுபற்றி தனது தலைவர் சம்பந்தனிடம் கலந்து பேசிவிட்டு எனக்கு பதில் கூறுவதாகத்தான் அவர் என்னிடம் கூறியிருந்தார். இந்த நிமிடம் வரை எனக்கு அவர் இதுபற்றி எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.
என் இல்லத்தில் நடைபெற்ற கோட்டாபயவுடனான கலந்துரையாடலின் போது என்னுடன் ஐ.தே.கவின் யோகராஜன் எம்.பி.யும், ஹெல உறுமய கட்சியின் மேல்மாகாணசபை அமைச்சர் உதய கம்மன்பிலவும், இந்திய தூதரகத்தின் ஒரு செயலாளரும் இருந்தார்கள். இதையும் நான் விக்னேஸ்வரனிடம் சொன்னேன்.
இத்தகைய உத்தேச கலந்துரையாடலில் நான் ஏற்பாட்டாளராக செயற்பட உத்தேசித்துள்ளேனா என்ற கேள்வியை உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் என்னிடம் கேட்க தொடங்கியுள்ளார்கள்.
ஒருபுறம் பேச விருப்பம் தெரிவித்து கோட்டாபய கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், மறுபுறம் கூட்டமைப்பு அரசுடன் நடத்த உத்தேசித்துள்ள பேச்சுவார்த்தைகளுக்கு புறம்பாக, விக்னேஸ்வரன் கோஷட்டாவுடன் கலந்துரையாட வேண்டுமா என்பதை கூட்டமைப்பு தலைமைதான் தீர்மானிக்க வேண்டும்.
இந்நிலையில் இத்தகைய ஒரு பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்கவோ, ஏற்பாட்டாளராக பரஸ்பர அழைப்பு விடுக்கவோ எனக்கு விசேட ஆர்வம் எதுவும் கிடையாது.
வழமையாக பேசும் தரப்புகள் தத்தம் காரணங்கள் காரணமாக பேச்சுக்களில் இருந்து விலகி கொள்ளும் போது, கடைசியில் விமர்சனத்துக்கு உள்ளாவது மத்தியஸ்தம் வகித்த ஏற்பாட்டாளர்தான் என்பது வரலாறு.
எனவே பேசுவதா, இல்லையா என்பதை பற்றி அவர்கள் இருவரும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இதில் இதைவிட தலையிட எனக்கு ஆர்வமும் இல்லை. எனக்கு இருக்கும் பணிகளின் மத்தியில் இதற்கு எனக்கு நேரமும் இல்லை என அந்த அறிக்கையில் மனோ குறிப்பிட்டுள்ளார்.