கோட்டாவின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடக்கும் என்கிறது புதிய அரசு!

அரச ஊழியராக இருந்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, தேர்தல் சட்ட விதிகளை மீறும் விதத்தில் நேரடியாக அரசியலில் ஈடுபட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்து விசாரணைகள் நடத்தப்படும். அரச ஊழியர்கள் எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையைத் தடுக்கும் நோக்கத்துடனேயே இது முன்னெடுக்கப்படுகிறது. –

rajitha sena

இவ்வாறு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளரும் எம்.பியுமான ராஜித சேனாரத்ன சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ இந்தத் தேர்தலில் தனது போட்டியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்றுப்போவது உறுதி என்ற நிலை ஏற்பட்டபோது, அரச அதிகாரத்தை இராணுவத் தலையீடு மூலம் கைப்பற்றுவதற்கான திட்டத்தை மஹிந்த ராஜபக்‌ஷவின் உதவியாளர்கள் முன்னெடுத்தனர் என்றும் ராஜித சேனாரத்ன எம்.பி. குற்றம் சுமத்தினார்.

கடைசி மணி நேரங்களில் நாடு முழுவதும் இராணுவத்தினரைக் களத்தில் இறக்குமாறு இராணுவத் தளபதிக்கு உத்தரவுகள் பறந்தன.

ஆனால் அந்த உத்தரவுக்கு பணிவதற்கு இராணுவத் தளபதி மறுத்துவிட்டார். ஜனநாயக விரோத மற்றும் ஊழல், மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

Related Posts