கோட்டாபயவிற்கு இந்தியா இரண்டு செய்தி அனுப்பியுள்ளது!! யாழில் கஜேந்திரகுமார் பரபரப்பு தகவல்!

ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளது. கோட்டாபய சீன சார்பு நிலைப்பாட்டில் இருந்தால், அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட 13 அம்சங்களையும் ஆதரிக்க தயாராக இருக்கிறோம். கோட்டா இந்திய சார்பு நிலையெடுத்தால், ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குவோம் என்ற செய்தியை இந்தியா இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

யாழில் இன்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசம் என்ற கோட்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு நக்கல் அடித்து நையாண்டி செய்தார்கள். தமிழர்களின் இறைமை என்றதை நிராகரித்தார்கள். இனப்படுகொலை தீர்மானத்தை நிராகரித்தார்கள். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு சென்றால்தான் தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்கும் என்ற கோட்பாட்டை நிராகரித்து நையாண்டி செய்தார்கள்.

கூட்டமைப்பு மட்டுமல்ல, கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தங்களை கொள்கைவாதிகளாக காண்பித்த விக்னேஸ்வரன், ஈபிஆர்எல்எவ் போன்றவையும் தேசம், இறைமையை நிராகரித்தார்கள்.

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுதிட்டம் வரும் நிலையில்,விக்னேஸ்வரன் இவற்றை கைவிட்டு மாகாணசபையில் ஒரு தீர்வு யோசனைகளை தயாரித்து, அரசாங்கத்தின் அரசியலமைப்புசபைக்கு சமர்ப்பித்தார்.

இதுவரை தமிழர்களின் அடிப்படை கோட்பாடுகளை நிராகரித்து வந்த தரப்புக்கள், திடீரென எழுந்து, எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாதென 2009இலிருந்து நாங்கள் சொல்லி வந்த கோட்பாடுகளை கொள்கையளவில் ஏற்று, ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

எப்படி இந்த விசித்திரமான செயல் நடந்திருக்க கூடும்?

இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட 5 கட்சிகளும், மலசலகூடத்தை பயன்படுத்தவதற்குகூட இந்தியாவின் அனுமதியை பெறாமல் போகமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள், இந்தியா தடைசெய்திருந்த கோட்பாடுகளை எப்படி ஒன்றிணைந்து கையொப்பமிட்டார்கள் என்பதுதன் கேள்வி.

தேர்தலிற்காக அந்த அறிக்கையில் கையொப்பமிட்டார்கள் என்பது ஒருபக்கமிருக்க, தேர்தலிற்காக மட்டுமே தாங்களும் கொள்கைவாதிகள் என காட்டிக் கொள்வதற்காக மட்டும் அதில் கையொப்பமிட்டிருக்க மாட்டார்கள். இந்த செயலின் ஆழத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஐந்து கட்சிகள், இதுவரை தமிழர்களின் அடிபபடை கோட்பாடுகளை நிராகரித்து வந்தவர்கள், இந்தியா விரும்பாத எதையும் செய்யாதவர்கள், இப்பொழுது திடீரென அதில் கையொப்பமிட்டுள்ளது, இந்தியா கொடுத்த ஆலோசனையின்படிதான்.

வரப்போகும் ஜனாதிபதி தேர்தல் வெறுமனே சஜித்- கோட்டாவிற்கிடையிலான தேர்தல் அல்ல. இந்த நாட்டிலே நடக்கும் ஜனாதிபதி தேர்தல் என்பது கட்சிகளின் போட்டியல்ல, அதன் பின்னால் நடக்கும் வல்லிரசுக்களிற்கிடையிலான போட்டியாகும்.

கோட்டாவின் பின்னாலுள்ளது சீனாவும், அதன் சார்பு நாடுகளும். சஜித்தின் பின்னாலுள்ளது இந்தியாவும், மேற்கு நாடுகளும்.

இந்த ஆவணத்தில் கையெழுத்து வைத்த ஐந்து கட்சிகளும் இந்தியாவின் முகர்கள்கள் என்பது உங்களிற்கு தெரியும். இந்த அறிக்கையின் மூலம், சீனா சார்பு கோட்டாவிற்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

நீங்கள் இந்தியா, மேற்கு நாடுகளின் நலன்களை மீறி செயற்பட்டால், இதுவரை தமிழ் தேசிய அரசியலை தமிழ் மக்களிடமிருந்து இல்லாமல் செய்ய கூட்டமைப்பின் ஊடாக செயற்பட்ட நாங்கள், மீண்டும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்துவது மட்டுமல்ல அதை ஆதரிக்கவும் தயாராக இருக்கிறோம் என்பதை அந்த ஐந்து முகவர் அமைப்பின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம் இன்னொரு செய்தியை கோட்டாவிற்கும், அவர் சார்ந்தவர்களிற்கும் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டு கூட்டில் ஒற்றையாட்சிக்குரிய இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென நாம் வாதாடினோம். அந்த கோட்பாடுகளை உண்மையில் ஏற்றுக்கொள்வதென்றால், இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதில் எந்த சங்கடமும் இருக்க முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 4 வருடமாக இடைக்கால அறிக்கையை தயாரித்து விட்டு, இப்போது நிராகரிப்பது வெட்கம், அவர்களின் முகத்திலடித்ததை போலிருக்கும் என சிலர் சொல்கிறார்கள். இடைக்கால அறிக்கையை நிராகரிக்காமலிருப்பதன் மூலம், கோட்டாபயவிற்கு இரண்டாவது செய்தியை கொடுத்துள்ளனர்.

சீனாவை கைவிட்டு இந்திய மேற்குலக வட்டத்திற்குள் நீங்கள் இருப்பீர்கள் என்றால் தமிழ் அரசியலை நாம் ஒற்றையாட்சிக்குள் முடக்கவும் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை கோட்டாபயவிற்கு அனுப்பியுள்ளனர் என்றார்.

Related Posts