கொழும்பு வந்த இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு வரவேற்பு!

நேற்று கொழும்பிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள கிளிநொச்சியிலிருந்து இராணுவத்தில் இணைத்து கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு இன்று சேவா வனிதா இராணுவக் கிளை அதிகாரியால் வரவேற்பு நடைபெற்றுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 6வது படைப்பிரிவாக கருதப்படும் இத் தமிழ்ப் பெண்கள் படையணி நேற்றுக்காலை கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை கொழும்பை வந்தடைந்தனர்.

இன்று காலை “விறு கெகுளு“ முன்பள்ளி கேட்போர் கூடத்தில் சேவா வனிதா இராணுவக் கிளை உயர் அதிகாரியான திருமதி மஞ்சுலிகா ஜயசூரிய தலைமையில் பிரமாண்டமான இராணுவ வரவேற்பு நடாத்தப்பட்டு மதிய போசனவிருந்துபசாரமும் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு கையில் அணிவதற்கு ”Brave Hearts” என்ற பெயரில் ஒரு றபரிலான வளையம் ஒன்றும் கொடுக்கப்பட்டதாக இலங்கைச் செய்திகள் தெரிவித்துள்ளன.

மேலும் பாடல், ஆடல், நடன நிகழ்ச்சிகள் என பலவகையான மேடை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு மதிய உணவினையும் முடித்துக்கொண்டனர். மேலும் சில தமிழ் யுவதிகள் தமது முதல் கொழும்புப் பயண அனுபவங்களை மேடையில் ஏறி தெரிவித்துள்ளனர்.

சில சிங்கள ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர்.

இலங்கை வானொலி அறிவிப்பாளர் ஒருவர் இந்நிகழ்ச்சியை தமிழிலும் சிங்களத்திலும் தொகுத்து வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் தேசிய கீதத்தோடு தமிழ் யுவதிகளின் இன்றைய சுற்றுலாப்பயணம் நிறைவுக்கு வந்தது.

ஒரு வார கால சுற்றுப்பயணத்திட்டத்தோடு கொழும்பு வந்தடைந்த இவர்கள், கொழும்பு தேசிய அருங்காட்சியகம், விகாரமகாதேவி பூங்கா, கொழும்பு பல்கலைக்கழகம், உலக வர்த்தக மையம், மிருகக்காட்சிச்சாலை, ஜனாதிபதி செயலகம், இராணுவத் தலைமயகம், கொழும்புத்துறைமுகம், பியகம சுதந்திர வர்த்தக வலயம் என பல்வேறு இடங்களுக்கு தமது பயணத்தை மேற்கொள்வர் என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 13ம் திகதி கொழும்புப் பயணத்தை முடித்துக்கொண்டு கிளிநொச்சி செல்லும் இவர்கள் அனுராதபுரத்தில் ஒருநாள் தங்கியிருந்து அங்கும் சில இடங்களைப் பார்வையிட்டு கிளிநொச்சி செல்வர் என தெரியவந்துள்ளது.

Related Posts