கொழும்பு றோயல் கல்லூரியின் தரத்தை ஒத்ததாக கிளிநொச்சி மத்திய கல்லூரி தரமுயர்த்தப்படும் என்று மத்திய கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் விஞ்ஞான ஆய்வுகூடம், பல்லூடக ஆய்வுகூடம், கணினி ஆய்வு கூடம், நூலகம் ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலைச் சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்விலேயே அவர் மேற்படி உத்தரவாதத்தை வழங்கினார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரி Super One AB தரத்துக்குத் தரமுயர்த்தப்படுவதாக இங்கு அறிவித்த அமைச்சர் பந்துல, 2016ம் ஆண்டுக்குள், செய்மதி மூலமான கற்றல், ஆங்கில மொழி மூலமான கற்கைநெறிகள் உள்ளிட்ட பல விடயங்களை கிளிநொச்சி மத்திய கல்லூரியிலே ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
கடந்த ஆண்டு க.பொ.த. உயர்தரப் பாடசாலை பெறுபேறுகளிலே வடக்கு மாகாண மட்டத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர் கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்தவர் என்பதை சிலாகித்துப் பேசிய அவர், மகிந்த சிந்தனையின் கீழ் 1000 பாடசாலைத் திட்டம் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு கட்டடங்களைத் திறந்து வைத்தனர்.