கொழும்பு – யாழ் ரயில் சேவை; 4 நாட்களில் ரூ.18 இலட்சம் வருமானம்

யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் சேவை மூலம், கடந்த நான்கு நாட்களில் 18 இலட்சத்து 31 ஆயிரத்து 765 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) கூறினார்.

yarldevi

ரயில் சேவையின் முதல் நாளான 14ஆம் திகதி 3 இலட்சத்து 26 ஆயிரத்து 220 ரூபாவும், 15ஆம் திகதி – 6 இலட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபாவும், 16ஆம் திகதி – 4 இலட்சத்து 8400 ரூபாவும், 17- ஆம் திகதி 4 இலட்சத்து 42 ஆயிரத்து 840 ரூபாவும் வருமானமாக கிடைத்துள்ளன என்று அவர் கூறினார்.

கடுகதி (இன்ரசிற்றி), குளிரூட்டப்பட்ட கடுகதி, யாழ்தேவி, தபால் ரயில் ஆகிய 4 ரயில்கள் மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவற்றில் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலின் இருக்கைகளுக்கான கேள்வி அதிகமாகவிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலுக்கான முற்பதிவுகள், மொபிட்டல் தொலைபேசி வலைப்பினூடாக மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் இருக்கைகள் அனைத்தும் முன்பாகவே முற்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.

இந்நிலையில், முற்பதிவுகளை மேற்கொள்ளாமல் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் பயணிப்பதற்காக யாழ். புகையிரத நிலையத்துக்கு வருபவர்கள், இருக்கைகள் இன்மையால் தினமும் 250பேர் வரையிலானோர் திரும்பிச் செல்கின்றனர் என்று அவர் கூறினார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் ஏனைய ரயில்களில் முற்பதிவுகளை மேற்கொள்வதற்கான முற்பதிவு முறைமைகள் இன்னமும் சீராக இயங்கத் தொடங்கவில்லை.

இதனால், முற்பதிவு செய்ய வருபவர்களை காத்திருக்க வைக்கவேண்டிய அதேவேளை, முற்பதிவுகள் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts