கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதால் அதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் இ.இரவீந்திரன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
”வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களிற்கிடையேயான தண்டவாளப்பாதையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் இன்று ஜனவரி 5ம் திகதியிலிருந்து இப்பாதையினூடான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் – கொழும்பு இற்கிடையே யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கபபட்ட புகையிரத சேவைகள் யாவும் அனுராதபுரத்திலிருந்து ஆரம்பித்து கொழும்பு வரை தமது சேவையைத் தொடரும்.
அதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரை யாழ்ராணி புகையிரத சேவை இடம்பெறும். இதன்காரணமாக தலைமன்னார் – கொழும்பிற்கு இடையிலான புகையிரத சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இக்காலத்தில் பயணிகள் பின்வரும் மூன்று வழிகளில் தமது பயணத்தை மேற்கொள்ள முடியும்.
1. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரை புகையிரதத்தில் சென்று பின்னர் வவுனியாவிலிருந்து அனுராதபுரம் வரை பேருந்தில் சென்று பின்னர் மீண்டும் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு வரை புகையிரதத்தில் பயணிக்கமுடியும்.
2. வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்து பேருந்தில் அனுராதபுரம் வரை பயணித்து பின்னர் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு வரை புகையிரதத்தில் பயணித்தல்.
3.யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களிலிருந்து நேரடியாக கொழும்பிற்கு பேருந்தில் பயணித்தல்
மேற்குறித்த மூன்று வழிகளையும் அடிப்படையாக வைத்து ஆளுநரின் வழிநடத்தலின் கீழ் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் பங்களிப்புடன் பின்வரும் மேலதிக போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதிசொகுசு, சொகுசு, அரைசொகுசு பேருந்துகள் உள்ளடங்களாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் வழி அனுமதிப்பத்திரம் பெற்ற 38 பேருந்துகள் தற்போது யாழ் – கொழும்பு வழித்தடத்தில் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன.
பயணிகள் இவற்றிற்கான ஆசனப் பதிவுகளை மேற்கொள்வதற்கான வழிகள் இலகுபடுதடதப்பட்டுள்ளன. பயணிகளின் மேலதிக கேள்விக்கு ஏற்ப பேருந்து சேவைகளை வழங்கக்கூடிய வகையில் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாணத்தில் உள்ள எல்லா டிப்போ சாலைகளில் இருந்தும் அனுராதபுரத்திற்கான சேவையை மேற்கொள்வதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 28 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் யாழ் – கொழும்பு வழித்தடத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட 33 பேருந்துகள் பயணிகளுக்கான கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தமது சேவையை இடை நிறுத்தியிருந்தனர்.
இப்பேருந்துகளை இயக்குவதற்கும், தற்போது ஆசனப்பதிவுகளை மேற்கொள்ளும் உரிமையாளர்களின் ஊடாக அவற்றிற்கான ஆசனப் பதிவுகளை மேற்கொள்வதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் – அனுராதபுரம் மற்றும் வவுனியா – அனுராதபுரம் ஆகிய வழிகளில் பயணிகளின் கேள்வி அதிகரிப்பிற்கு ஏற்ப தொடர்ச்சியாக சேவையாற்ற முன்வந்துள்ளன. வடமாகாணத்தில் மாவட்டங்களிற்கு இடையேயான சேவைக்கு அனுமதிப்பத்திரம் பெற்று வருமானக்குறைவு காரணமாக தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடாமல் 25 பேருந்துகள் உள்ளன.
தேவை ஏற்படும் பட்சத்தில் இப்பேருந்துகளிற்கும் தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கி அவற்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பயணிகள் தமக்கு தேவையான ஆசனப் பதிவுகளை மேற்கொள்வதற்காக, ஏற்கனவே உள்ள ஆசனப்பதிவு உரிமையாளர்களின் ஊடாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆசனப்பதிவுளை மேற்கொள்வதற்கான தொடர்பு இலக்கங்கள் பொது மக்களுக்கு பத்திரிகைகள் ஊடாக அறிவிக்கப்படும். அத்தோடு யாழ். மத்திய பேரூந்து நிலையத்திலும் காட்சிப்படுத்தப்படும்.
இவ் ஒழுங்குகளுடன் தேவைக்கு ஏற்றவாறு மேலதிக ஒழுங்கு வசதிகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு
யோ.நோபெட் ரவிச்சந்திரன் – போக்குவரத்து உத்தியோகத்தர் – 0772385784,
சி.சித்ராங்கன் – பேருந்து நிலைய பொறுப்பதிகாரி – யாழ்ப்பாணம் – 0765378432,
ஈ.கோபிதன் – பேருந்து நிலைய பொறுப்பதிகாரி – வவுனியா – 0779276242 ஆகியோரை தொடர்புகொள்ள முடியும் என்றார்.
இவ் ஊடக சந்திப்பில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பொது முகாமையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.