கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் மே 4 வரை ஊரடங்கு நீடிப்பு!

கோரோனா வைரஸ் தொற்றுள்ள அபாய வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் வரும் மே 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்குவரை நீடிக்கப்படுல் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது அனைவருக்கும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மாவட்டங்களில் நாளைமறுதினம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு நீக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் உள்பட ஏனைய 21 மாவட்டங்களிலும் நாளைமறுதினம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீளவும் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 மாவட்டங்களிலும் மே முதலாம் திகதிவரை தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Posts