கொழும்பு நகருக்குள் தடையின்றி கள்ளுக்கடைகளை ஆரம்பிப்பதற்கு கொழும்பு பிரதேச செயலாளர் வழங்கியுள்ள அனுமதியை ரத்துசெய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தர்ம ஷக்தி அமைப்பு இந்த மனுவை தாக்கல்செய்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் மாதம்பாகம அச்சாஜி தேரர் தெரிவித்தார்.
கொழும்பு நகரில் தற்போது 5 கள்ளுக்கடைகளை நடத்துவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது.
தற்போது கொழும்பு பிரதேச செயலாளர் விடுத்துள்ள உத்தரவின்படி, தடையின்றி எத்தனை கள்ளுக்கடைகளை வேண்டுமானாலும் ஆரம்பிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அச்சாஜி தேரர் இதன் முலம் பெரும் சமூகப் பிரச்சினைகள் உருவெடுப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இது சம்பந்தமாக கொழும்பு பிரதேச செயலாளரிடம் தான் கேட்டதாகவும் அப்போது அவர், இது அரசாங்கத்தின் கொள்கைரீதியான முடிவென்று தெரிவித்ததாகவும் அச்சாஜி தேரர் கூறினார்.
போதை பொருட்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுக்குமென்று ஜனாதிபதி பல முறை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அரசு இம்மாதிரியான தீர்மானங்களை எடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய அச்சாஜி தேரர், கொழும்பு பிரதேச செயலாளரின் உத்தரவை ரத்துசெய்வதற்கு ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூறினார்.