சொந்த இடத்தில் வாழவைக்குமாறு கோரி தலைநகர் கொழும்பிற்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியும், தாம் ஏமாற்றப்பட்ட நிலையை உணர்ந்ததாக இரணைதீவு மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடற்படையின் வசமுள்ள தமது காணிகளை விடுவித்து, கடற்றொழிலை மேற்கொள்ள வழிசமைத்து கொடுக்குமாறு கோரி, இரணைதீவு மக்கள் இன்று (புதன்கிழமை) கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, ஜனாதிபதி செயலகத்தில் மகஜரொன்றையும் கையளித்தனர்.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுனந்த காரியவன்சவிடம் மகஜரை கையளித்து தமது பிரச்சினைகளை விளக்கிக் கூறியபோதும், தமக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லையென மன்னார் சமூக மற்றும் பொருளாதார அமைப்பின் தலைவரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான யாட்சன் தெரிவித்துள்ளார்.
மக்களின் கோரிக்கை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டு, அதன் பின்னரே பதிலளிக்க முடியுமென ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் குறிப்பிட்ட நிலையில், அந்த இடத்தில் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக யாட்சன் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சொந்த இடத்தை விட்டு ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் தம்மை ஒன்றிணைத்து வாழ வைக்க வேண்டும் என கண்ணீர் வடிக்கும் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க, இதனை சமூக பிரச்சினையாக கருதி, அனைத்து சமூக மக்களும் குரல்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.