கொழும்பு – ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் என அடையாளங்காணப்பட்ட நபர் அந்த தொற்றுக்கு உள்ளாகவில்லை என பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பு 13 ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் பதிவான கொரோனா தொற்று நோயாளர் என அடையாளங்காணப்பட்ட நபர் கரையோர பாதுகாப்பு வீரர் என்பதினாலும் வெளி நாட்டிலிருந்து வந்ததன் காரணமாகவும் கொவிட் 19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ள ஒரு நபராக அடையாளம் காணப்பட்டதில் சுகாதாரப் பிரிவு தொடர்ந்து கவனம் செலுத்தியது.
இதற்கமைவாக வீட்டு தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேற்றின் அடிப்படையில் இவர் கொவிட் 19 தொற்று நோயாளராக அடையாளங்காணப்பட்ட உடன் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சுகாதாரப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளினால் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கமைவாக பி.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேறாக உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் கொவிட் 19 நோயாளராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோன்று அவருடன் தொடர்புபட்டதாக கருதப்பட்ட சுமார் 154 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இருப்பினும் தொற்று நோயாளராக கருதப்பட்ட நபர் தொடர்பாக வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 5 பி.சி.ஆர் பரிசோதனைகளின் பெறுபேற்றின் அடிப்படையில் தொடர்ச்சியாக இந்த நபர் கொவிட் 19 நோயாளர் அல்ல என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மிகவும் பாதுகாப்பான நடவடிக்கையாக கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 154 பேரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக கொவிட் 19 நோயாளர் என்று முதலில் அடையாளங்காணப்பட்ட நபர் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 154 பேரையும் மீண்டும் தமது வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.