ஹெரோயின் போதைப்பொருளை கொழும்பிலிருந்து எடுத்து வந்து யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கும் நபர் காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார்
200 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் அவர் இன்று காலை நெல்லியடியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
தெல்லிப்பழை கட்டுவனில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபடும் 36 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் 21 கிராம் போதைப்பொருளுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டதையடுத்து அவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பிரதான நபர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதியே யாழ்ப்பாணத்துக்கு உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் விநியோகித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர், தெல்லிப்பழை கட்டுவனில் நேற்றிரவு முன்னெடுத்த சுற்றுகாவல் நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் குடும்பப் பெண்ணைக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 21 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. அவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பிலிருந்து பேருந்தில் ஹெரோயினை எடுத்து வரும் நபர் மருதனார்மடத்தில் இறங்கி தனது வீட்டுக்கு கொண்டு வந்து பொதியைத் தருவதாகவும் அதனை யாழ்ப்பாணத்தில் 5 பகுதிகளுக்கு பிரித்து வழங்குவதாகவும் பெண் தகவல் வழங்கியுள்ளார்.
அந்த நபர் நேற்றிரவு கொழும்பிலிருந்து பேருந்தில் வருகை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை தாயார் கைது செய்யப்பட்ட விடயத்தை மகள், கொழும்பு நபருக்கு வழங்கியுள்ளார்.
அதனை அறிந்த பொலிஸார், தாயாரை மீளவும் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளனர். பேருந்தில் வருகை தந்துகொண்டிருந்த நபரை நெல்லியடிக்குச் செல்லுமாறு அந்தப் பெண்ணைத் தெரிவிக்க வைத்த பொலிஸார், மந்திகையில் காத்திருந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து வந்த பேருந்தில் மந்திகையில் இன்று அதிகாலை வந்து இறங்கிய நபரைக் கைது செய்த பொலிஸார், அவரிடமிருந்து 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் கைப்பற்றினர்.
அத்துடன், அந்த நபருக்கு கொழும்பில் ஹெரோயின் விநியோகிப்பவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு பிராந்திய பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். 221 கிராம் ஹெரோயினும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.
காங்கேசந்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சர் சேனாதிரவின் கீழான உப பொலிஸ் பரிசோதகர் நிதர்சன், உப பொலிஸ் பரிசோதகர் மதுரங்க ஆகியோர் தலமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிகையை முன்னெடுத்தனர்.