யாழில் நடைபெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு குழுவான “டில்லு” குழுவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து இராணுவ சீருடை உட்பட வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
கொக்குவில் தலையாளி பகுதியில் இக் குழு மறைந்திருந்த போது பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த குழுவினர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன் 60 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
அச் சம்பவம் தொடர்பாக புலன்விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசாருக்கு அக் குழு தலையாளி பகுதியில் மறைந்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலையே அக் குழுவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்ட போது இவர்களிடம் இருந்து இராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் 2 சீருடை உட்பட 3 வாள்கள், கத்திகள், 3 மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் அனைவரையும் நேற்று மல்லாகம் நீதவானின் முன் முற்படுத்தப்பட்ட போது நால்வர் சரீர பிணையில் விடுவிக்கப்படதுடன் ஏனைய ஐவரையும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மாதம் 6ம் திகதி ஆவா என்னும் குழுவை சேர்ந்த 13 பேர் கைது செய்ப்பட்டு இருந்தனர். அது தொடர்பான வழக்கு விசாரணை யாழ். நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது
அதில் அக் குழுவை சேர்ந்த 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் ஆவா உட்பட ஏனைய மூவரும் எதிர்வரும் 13 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.