அச்சுவேலி பகுதியில் உள்ள 3 வீடுகளில் 110 பவுண் நகைகள், சனிக்கிழமை (02) இரவு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதான சந்தேகநபரான வான் சாரதி அன்றைய தினம் இரவே கைது செய்யப்பட்டதாகவும், மேலும் இரண்டு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சுவேலி தெற்கு பகுதியிலுள்ள வீட்டின் முன்கதவை உடைத்து உள்நுழைந்து, வீட்டிலிருந்தவர்களை கத்தி முனையில் அச்சுறுத்தி, பீரோவில் இருந்த 15 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
தொடர்ந்து, 50 மீற்றர் தொலைவிலுள்ள இன்னொரு வீட்டில் பின்பக்க கதவை உடைத்து உள்நுழைந்து 14 பவுண் நகை, 4 அலைபேசி மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் என்பனவும், புத்தூர் மேற்கு பகுதியிலுள்ள வீட்டுக்குள் நுழைந்து 81 பவுண் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கத்தி உள்ளிட்ட சான்றுப்பொருட்களையும், தடயவியல் பொலிஸார், மோப்ப நாயின் உதவியுடன் விசாரணை செய்து சந்தேகநபர்களைக் கைதுசெய்தனர்.
இதேவேளை, இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை தேடி வருவதாக பொலிஸார் கூறினர்.