கொள்கை ரீதியில் இணக்கம் ஏற்பட்டால் த.தே.கூ.வுடன் இணைவோம்: த.தே.ம.மு

kajenthiran‘கொள்கை ரீதியில் ஒற்றுமை ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது பற்றி பரிசீலிக்கப்படும்’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மேதின எழுச்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்ட வல்வெட்டித்துறை நகர சபைத்தலைவர் ஆனந்தராஜா உரையாற்றும் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து தமிழ் மக்களின் உரிமைக்காக போராட்டங்களை நடத்த வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கையிலே செல்வராஜா கஜேந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில், ‘வட கிழக்கு தமிழ் மக்களை அழித்து இலங்கையை சிங்கள நாடாக்கும் முயற்சியில் தான் அரசு தற்போது ஈடுபட்டு வருகின்றது. தற்போது இடம்பெறும் சிங்கள குடியேற்றத்தினை அரசு இராணுவத்தின் மூலம் செயற்படுத்தி வருகின்றது’ என்று அவர் கூறினார்.

‘தமிழ் மக்களின் வியாபாரச் சுரண்டல், மீன்பிடித் தொழிலில் குறுக்கீடு, விவசாய நில ஆக்கிரமிப்பு போன்ற செயற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான எமது பிரச்சினைகளுக்காக மேற்குலகிடம் செல்வதில் எமது மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை’ என்று அவர் சுட்டிக்காட்டினார்;.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இந்த கூட்டத்தின் போது உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகையில், ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் இருந்த கொள்கையிலிருந்து தற்போது வேறுபட்டுச் செயற்படுகின்றது. ஆரம்பத்தில் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்ற கூற்றை வெளிப்படுத்திய போதும், அதிலிருந்து மாறுபட்டு அதிகாரப் பரவலாக்கல் தேவை என்ற விவாத நிலை மாறி வடமாகாண சபைத் தேர்தலினூடாக முதலமைச்சர் பதவியினை வென்று தமிழர் உரிமைகளை பெற்றுக்கொடுப்போம் என்று வலியுறுத்தகின்ற விடயம் எந்தளவுக்குச் சாத்தியமாகும்’ என சுட்டிகாட்டினார்.

‘மக்கள் போராட்டத்தினூடாக மக்கள் அரசியலினை முன்னெடுக்க வேண்டும். நாம் மக்கள் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான காரணம் தமிழ் மக்கள் சக்தியினை இலங்கை அரசுக்கு உணர வைப்பதேயாகும். தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது மக்களின் சக்தியைக் கொண்டே அரசியலை முன்னெடுத்து வருகின்றது’ எனவும் அவர் கூறினார்.

அத்துடன், ‘இலங்கையை ஆதிக்கம் செலுத்தும் சக்தி இந்து சமுத்திரத்தை ஆளும் சக்தியாகவுள்ளது. சிங்கள தேசத்தை கையாள இன்று உள்ள ஒரே சக்தி தமிழ் அரசியல் சக்தியாகும். தமிழ் அரசியல் இன்று ஒரு முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. இவ்வாறு இருக்கையில் நாம் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படப் போகின்றோம் என்பது கேள்விக்குறியாகவுள்ளது’ என்றார்.

‘அந்தவகையில், ஜெனீவாத் தீர்மானம் உள்ளடங்களாக மேற்குலக நாடுகளின் பேச்சுக்கள் தமிழ் மக்களின் தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு வழிவகுக்காது. எமது பிரச்சினையை நாம் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எமக்கு இடையில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது.

நாம் வடமாகாண சபைத் தேர்தலை முற்றாக புறக்கணிக்கின்றோம். எமக்கு ஏட்டுக்கு போட்டியாக தமிழ் தேசியக் கூட்டமைப்புச் செயற்படுகின்றது. ஆரம்பத்தில் வலி.வடக்குப் காணிப் பிரச்சினையை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை. மக்கள் இப்பிரச்சினை தொடர்பாக எம்மிடம் முறையிட்ட பின்பு நாம் போராட்ட முன்னெடுப்பில் இறங்க அவர்களும் போராட்டத்தினை முன்னெடுத்தனர்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts