மாவீரர் வாரத்தில் மரங்களை நாட்டினால் அடுத்த மாவீரர் தினத்தில் உமது நினைவாக மரம் நாட்டவேண்டிவரும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு தொலைபேசி மூலம் அநாமதேய கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்ட போதும் நேற்று (26-11-2013) அவர் மன்னாரில் மரங்களை நாட்டினார்.
மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும் விவசாய அமைச்சருக்குமான கலந்துரையாடல் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பண்ணையில் நேற்று நடைபெற்றது.
கலந்துரையாடல் நடந்துகொண்டிருந்த போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் மரங்களை நாட்டுவதை நிறுத்தவேண்டும் என்று தெரிவித்தும் அவ்வாறு நாட்டினால் அடுத்த மாவீரர் தினத்தில் அவரது நினைவாகவும் மரங்களை நடவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விவசாயிகளுடனான கலந்துரையாடலை நிறைவு செய்த உரையாற்றிய அமைச்சர், ‘மரணித்தவர்கள் நினைவாக மரங்களை நடுவது குற்றமாகாது, இங்கு தங்கள் பிள்ளைகளைப் போரில் இழந்த ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கண்ணீர் விட்டு அழுது தங்கள் துயரை ஆற்றுவதற்கு இந்த அரசு தடைவிதிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்ட நிலையில் எல்லோரும் வீடுகளில் அவர்களது நினைவாக உயிருள்ள ஜீவ சமாதிகளாக மரங்களை நடுவோம்’ என்றும் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண போக்குவரத்து, மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன், ஆகியோர் மரக்கன்றுகளை நாட்டியுள்ளனர்.