இந்தியாவின் தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளது போன்று, கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுட்காலச் சிறைத் தண்டனை வழங்கும் வகையில் இலங்கையின் தண்டனைச் சட்ட நடவடிக்கைக் கோவையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த முருகேசு சத்தியநாதன் என்பவரை உலக்கையால் அடித்துக் கொலை செய்துவிட்டு, அவருடைய ஹை ஏஸ் வாகனத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் தலைமறைவாகியுள்ள ஒருவர் உட்பட மூன்று எதிரிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து கடந்த திங்களன்று தீர்ப்பளித்திருந்தார்.
மரண தண்டனை வழங்கும் ஒரு நீதிபதி அந்தத் தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் தனது தனிப்பட்ட அபிப்பிராயத்தை ஜனாதிபதிக்கு அறிக்கை வடிவத்தில் அனுப்பி வைக்க வேண்டும் என்று தண்டனை நடவடிக்கைக் கோவையில் பரிந்துரை செய்யப்பட்டமைக்கு அமைவாகவே, நீதிபதி இளஞ்செழியன் கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயள் தண்டனை வழங்கும் வகையில் இலங்கையின் சட்ட நடவடி கோவையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
அந்தப் பரிந்துரை அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:
இந்திய உச்ச நீதிமன்றத்தால் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் ஒருவரின் மரண தண்டனையை இந்திய ஜனாதிபதி ஆயுள் தண்டனையாகக் குறைத்திருந்தார். ஏனைய மூவருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆணை ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மரண தண்டனை வழங்கப்பட்டு, 15-20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததன் பின்பே, இந்த ஆணையை ஜனாதிபதி பிறப்பித்திருந்தார்.
மரண தண்டனைக்கான நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டு, 20 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்ததன் பின்னர் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது அவசியமா? என்ற சட்ட வினா தொடுத்து இந்த மூவரும் இந்திய உச்சநீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரணை செய்த இந்திய பிரதம நீதியரசர் சதாசிவம் தலைமையிலான குழாம் மூன்று பேரினதும், மரண தண்டனையை இரத்துச் செய்து அதனை ஆயுள் தண்டனையாக மாற்றியது.
இந்தத் தீர்ப்புக்குப் பல காரணங்கள் கூறப்பட்டபோதிலும், இந்திய தண்டனைச் சட்டக் கோவையில் கொலைக் குற்றம் புரிந்தவருக்கு நீதிமன்றம் மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டிப்பதை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தண்டனை குறைப்பு செய்யப்பட்டது.
கொலைக்குற்ற வழக்கு ஒன்றில், நீதிபதிகள் விரும்பினால் ஆயுள் தண்டனை கொடுக்கலாம் என்ற குற்ற நடவடி கோவையின் பரிந்துரைக்கு அமைவாகவே, ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளுக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அதில் ஒருவர் இலங்கைப் பிரஜை. அவருக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் கருணை காட்டி ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அங்கே நீதிபதிகளுக்கு கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு சட்டம் பரிந்துரை செய்கின்றது.
ஆனால் இலங்கை குற்ற நடவடி கோவையில் பிரிவு 296 இன்படி, கொலைக்குற்றம் புரிந்த குற்றவாளிக்கு மரண தண்டனை மட்டுமே நீதிபதி வழங்க வேண்டும் என சட்டம் கூறுகின்றது. நீதிபதி விரும்பினாலும் குறைந்தபட்ச தண்டனை வழங்க முடியாது. எனவே, இந்த சட்ட சரத்து மாற்றப்பட வேண்டும். கொலைக் குற்றவாளிகளுக்கு இந்திய தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவை ஒத்ததாக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும். அப்படி சட்டம் திருத்தப்பட்டால் கொலைக் குற்றவாளிகளுக்கு, வழக்குகளின் தன்மைக்கு ஏற்ற வகையில், நீதிபதிகள் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்குவதற்கு சுதந்திரமாகச் செயற்பட முடியும்.
இந்தியாவின் ஜனாதிபதி அப்துல் கலாம் பதவியில் இருந்து 5 ஆண்டுகளில் எந்தவொரு தூக்குத் தண்டனையில் கையொப்பம் இடவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
இலங்கையில் போதை வஸ்து குற்றம் என்பது பாரதூரமான குற்றமாகும். அத்தகைய குற்றவாளிக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கலாம் என்றே சட்டம் பரிந்துரைக்கின்றது. எனவே, கொலைக்குற்றத்திற்கு மரண தண்டனைதான் தீர்ப்பு என சட்டம் பரிந்துரை செய்திருப்பது சுதந்திரமாகத் தீர்மானம் எடுக்க முடியாத சூழ்நிலைக்கு நீதிபதிகளை ஆளாக்கியுள்ளது.
மிருசுவில் கொலை வழக்கில் மூவருக்கு நீதிபதி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். மற்றைய இருவரும் தண்டனை பெறுவதற்காக போகம்பறை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கின் குற்றவாளிகள் இளைஞர்கள். அவர்கள் வாழ வேண்டியவர்கள். யுத்தத்திலும் சுனாமியிலும் பல இலங்கை பிரஜைகள் மாண்டு போனார்கள். மரண தண்டனை மூலமும் உயிர்கள் காவு கொள்ளப்படுவது ஏற்புடைத்தல்ல. எனவே, இவர்கள் இருவரையும் தூக்கிலிடாமல், அவர்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கும் வகையில் தண்டனை குறைப்பு செய்யுமாறு பரிந்துரைக்கின்றேன்.
நீதிபதி மரண தண்டனை தீர்ப்பு எழுதுகின்றார். ஜனாதிபதி தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆணையைப் பிறப்பிக்கின்றார். சிறைச்சாலை அலுக்கோசு கழுத்தில் தூக்குக் கயிறைப் போட்டு தண்டனையை நிறைவேற்றுகின்றார். மனித உயிர் ஒன்றைப் பறிப்பதற்கு அரச சேவையில் உள்ள இந்த மூவருக்கும் சட்டம் அனுமதியளித்திருக்கின்றது. மேல் நீதிமன்ற நீதிபதி என்ற முறையில், இது ஒரு சீரான முறையல்ல என்பதே, எனது அபிப்பிரயாமாகும். ஆகவே, இந்தியாவில் இருப்பது போன்று குற்ற நடவடிக்கைக் கோவையில் கொலைக்குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனை என்று இலங்கையின் குற்ற நடவடிக்கைக் கோவையில் திருத்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.