கொலைகார அரசுக்கு வாக்களிக்காதீர்கள்; வடக்கு மக்களை கோருகிறது கூட்டமைப்பு

TNA-elecetion-meeting-1எங்கள் உறவுகளை ஈவு இரக்கமின்றி கொன்றொழித்த கொலைகார அரசுக்கோ அல்லது அதனுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கின்ற ஒட்டுக் குழுக்களுக்கோ தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது இவ்வாறு வடக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது .தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகமும் முதலாவது பிரசாரக் கூட்டமும் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி, ந.சிறிகாந்தா ஆகியோர் மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.

இவர்கள் தமது உரைகளில் தெரிவித்தமை வருமாறு:

இந்த அரசு வடமாகாண சபைத் தேர்தலை மனதார விரும்பி நடத்தவில்லை. சர்வதேச அழுத்தத்தின் காரணமாகவே நடத்துகின்றது. அவ்வாறு அழுத்தத்தின் மத்தியில் நடத்தும் தேர்தலிலும் எப்பாடுபட்டாவது வெல்ல வேண்டும் என்று அரசு நினைக்கின்றது.

இந்த அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் தொடர்ந்து அழுத்தங்கள் உருவாகி வருகின்றன. இரண்டு தடவைகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

போர்க்குற்றச் சாட்டுகள் தொடர்பில் இந்த அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச மட்டத்தில் வலுப்பெற்று வருகின்றது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிப்பதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது. வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அரசுக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் எமது உரிமைகளை வீணடிக்கும் செயல்.

முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான எங்கள் உறவுகளைக் கொன்றொழித்த, காணாமற்போகச் செய்த, அட்டூழியம் செய்த கொலைகார அரசையா ஆதரிக்கப் போகின்றீர்கள்? அல்லது அவர்களது அருவடிகளான ஒட்டுக் குழுக்களையா ஆதரிக்கப்போகின்றீர்கள்?

மாகாணசபை முறையை நாங்கள் தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் அதிலுள்ள ஒருசில அதிகாரங்களைப் பயன்படுத்தி இனவழிப்பை நிறுத்த வேண்டும். மாகாண சபையை நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெல்ல வேண்டும்.

அப்போதுதான் நாங்கள் சொல்வதை – தமிழ் மக்கள் சொல்வதை – சர்வதேசம் கேட்கும்.
மாகாண சபை அதிகாரங்களை இந்த அரசு தந்தால் அதை வைத்து மக்களுக்கு சேவை செய்வோம்.

தராவிட்டால், இந்தத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுத்த சர்வதேசத்துடன் இணைந்து அந்த அதிகாரங்களைப் பெற்றெடுப்போம். எங்கள் மக்கள் ஜனநாயக சூழலில் வாழ விரும்புகின்றனர். இதனால் இங்கு நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் விலகப்பட வேண்டும் – என்றனர்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாணத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் மற்றும் பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

தமிழ் பேசும் அரசே நிறுவப்படவேண்டும்; சி.வி. விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் த.தே.கூவின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்

Related Posts