கொரோனா வைரஸ் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்

அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் அண்மைக் காலத்தில் துரிதமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துக் கொண்டு, பலமாக காணப்பட்ட நிலையிலேயே அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்பு ஏற்பட்டது.

எனினும், இலங்கை கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் மத்தியிலேயே இந்த பேரிடருக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற மோசமான ஆட்சி காரணமாக எமது கடன் சுமை 71% இதனால் அதிகரித்தது. ரூபாயின் பெறுமதி 30% இதனால் வீழ்ச்சியடைந்தது. பொருளாதார வளர்ச்சி வேகம் 2.7% வரை குறைவடைந்தது. 2019 நவம்பரில் நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசாங்கமொன்றை அமைத்த போதிலும், எமக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையினால், கடந்த அரசாங்கத்தின் மருந்து மற்றும் உர வழங்குனர்களுக்கு நிலுவைப் பணத்தைச் செலுத்துவதற்கேனும் இடைக்கால கணக்கறிக்கையொன்ற நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையேற்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 150(3) ஆம் உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு கிடைக்கும் நிதி தொடர்பான ஏற்பாடுகள் மாத்திரமே ஆறுதலாக உள்ளது. இந்த அனைத்து பாதகமான நிலைமைகளின் மத்தியிலேயே நாம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. கடந்த மார்ச் 11 ஆந் திகதி முதலாவது கொரோனா நோயாளி அடையாளங் காணப்பட்டவுடன், நாம் நோயினை முன்னரே இனங்காணுதல், நோயாளிகளை வேறுபடுத்தி சிகிச்சையளித்தல், அபாயத்தை எதிர்நோக்கிய நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தல், நோயாளிகளுடன் பழகிய நபர்களைக் கண்டறிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற கட்டுப்பாட்டு முறைமைகளை அறிமுகப்படுத்தினோம். எமது வாழ்க்கையில் இவ்வாறானதொரு நடவடிக்கையை ஒருபோதும் கண்டதில்லை. நோய் பரவுவதைத் தடுப்பதற்காக பல வாரங்கள் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியேற்பட்டது.

நாடு முழுவதும் தமது வீடுகளிலிருந்து வெளியேற முடியாத மக்களுக்கு உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான முறைமையொன்றைத் தயாரிக்க வேண்டியேற்பட்டது. குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு உதவி வழங்க வேண்டியேற்பட்டது. நாட்டின் உற்பத்திச் செயற்பாட்டை நடாத்திச் செல்வதற்காக விவசாயிகள், மரக்கறி விவசாயிகள் மற்றும் மீனவர்களின உற்பத்திகளைக் கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டது. இந்த அனைத்தையும் ஒரே தடவையில் மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஒழுங்குபடுத்திக் கொள்ள முடிந்தமை உண்மையில் முகாமைத்துவத்தின் பிரதிபலனாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை இன்று முழு உலகமும் ஏற்றுக்கொள்கிறது. ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பாக தனித்துவமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார். எமது அரசாங்கத்தின் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாட்தொகுதியினர் முழு உலகினதும் கவனத்தை ஈர்த்துள்ளனர். நோயாளிகள் பழகிய நபர்களைக் கண்டறிவதில் எமது உளவுப் பிரிவு வெளிப்படுத்தியுள்ள திறமை, அர்ப்பணிப்பு காரணமாகவும், தனிமைப்படுத்தல் செயற்பாட்டை மேற்கொண்டு செல்வதில் முப்படையினர் வெளிப்படுத்தியுள்ள வினைத்திறன் காரணமாகவும் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிசார் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலான அரச ஊழியர்களும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தின் வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கியுள்ளனர். இன்று கொரோனா வைரஸ் காரணமாக பாதுகாப்பற்றதாக மாறியுள்ள உலகில் எமது நாடு மிகவும் பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது. அழிக்கப்பட்ட பொருளாதாரம், இயலுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்திற்கு இடையூறு விளைவிக்கின்ற, நாட்டின் மீது அன்பு இல்லாத சந்தர்ப்பவாத எதிர்க்கட்சியொன்று இந்த நாட்டில் உள்ள நிலைமையிலேயே நாம் இவ்வாறான கட்டத்தை அடைந்துக் கொண்டோம்.

தனிமைப்படுத்தலுக்குச் செல்வதை நிராகரித்தவர்களை ஊக்குவித்தமை மூலம் எதிர்க்கட்சித்தலைவர் ஆரம்பத்திலிருந்தே கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தினைச் சீர்குலைக்க முயற்சித்தார். அதன் பின்பு, பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அரச நிதியை செலவிடுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி அவர்கள் சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து அரச சேவைகளையும் சீர்குலைக்க முயற்சித்தனர். புதிய பாராளுமன்றம் ஜூன் இரண்டாம் திகதிக்கு முன்னர் கூட வேண்டும் எனவும், பாராளுமன்றத் தேர்தலை அதற்கு முன்னர் நடாத்த முடியாது எனவும், அதனால் பாராளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் இன்று அவர்கள் கூறி வருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் மூன்று வருடங்களுக்கு உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைத்தமையை நாம் அறிவோம். வழக்குகள் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கேனும் தேர்தலை நடாத்துவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தமையினால் மாத்திரமே நீதிமன்றம் சென்று தேர்தலை குறிப்பான திகதியின்றி ஒத்திவைக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. 2017 ஆம் ஆண்டு மாகாண சபைகள் கலைக்கப்படுவதற்கு சில நாட்களே இருந்த சமயத்தில், மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படுவதைத் தடுப்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல் முறைமையை மாற்றியமைத்தது.

அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் என சட்டமா அதிபர் தெரிவித்தபோது, அவர்கள் பாராளுமன்றத்தின் நடைக்கூடத்தில் மேற்கொண்ட பேரம் மூலம் வாக்குகளுக்காக கொள்கைகளைக் காட்டிக்கொடுத்து தேவையான பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர்.

அந்த இழிவான கொடுக்கல் வாங்கலின் பிரதிபலனாக 2017 ஆகஸ்ட் 25 ஆந் திகதி நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ சதவீதம் 40% ஆக காணப்பட்டதுடன், அதன் ஒரு மாதத்தின் பின்பு நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ சதவீதம் 50% ஆக காணப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் மனுச் சமர்ப்பித்து,

பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பாராளுமன்றத் தேர்தலை ரத்துச் செய்த அரசியல் கட்சிகள் உள்ள உலகின் ஒரே ஜனநாயக நாடு இலங்கையாகும். தற்போதைய பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு இன்று மேற்கொள்ளும் முயற்சி அந்த இழிவான வரலாற்றின் ஒரு நீட்சியாகும். நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலாவது பொது சமூக வாழ்வு மீண்டும் ஆரம்பமாக வேண்டியுள்ளது. எமது 25 நிர்வாக மாவட்டங்களில், பதினொரு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவரேனும் இல்லை. மேலும் ஏழு மாவட்டங்களில் தொற்றுடைய ஒருவர் அல்லது இருவரே அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு மாவட்டங்களில் ஐந்திற்கும் ஏழுக்குமிடையிலான எண்ணிக்கையைக் கொண்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஐந்து மாவட்டங்களில் மாத்திரமே குறிப்பிடத்தக்களவான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் இரண்டாம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தல் நடாத்தப்படும் திகதி ஏப்ரல் 25 எனவும், புதிய பாராளுமன்றம் முதலாவது கூடும் திகதி மே 14 எனவும் அறிவித்தார். அதன் பிறகு பத்து நாட்களின் பின்பு முதலாவது கொரோனா நோயாளி கண்டறியப்பட்ட சந்தர்ப்பத்தில் தேர்தல் நடாத்தப்படும் திகதியை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படவில்லை. 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 24(3) ஆம் பிரிவுக்கு ஏற்ப, ஜனாதிபதி குறிப்பிட்ட திகதியில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த முடியாவிடின், அதற்கு வேறொரு திகதியைக் குறிப்பதற்கான கடப்பாடு தேர்தல் ஆணைக்குழுவுக்கு காணப்படுகிறது.

திகதியொன்றைக் குறிப்பிடாது பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது. எதிர்காலத்தில் பல வாரங்களில் அல்லது பல மாதங்களில் இடம்பெற முடியுமான அல்லது இடம்பெற முடியாத விடயங்கள் தொடர்பாக ஏற்படுத்திக்கொள்ளும் ஊகங்களின் அடிப்படையில் கட்டாயமாகப் பின் பற்ற வேண்டிய சட்டரீதியான ஏற்பாடுகளை ஒதுக்கித்தள்ளி விட முடியாது.

தேர்தல் ஆணைக்குழு முதலில் 24(3) ஆம் பிரிவின் கீழ் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைப்பொறுப்பினை சட்டத்திற்கு ஏற்புடையவாறு நிறைவேற்றி விட்டு, அதன் பின்பு கலந்துரையாட வேண்டிய விடயம் ஏதாவது இருப்பின், அது தொடர்பாக கவனஞ் செலுத்த வேண்டும்.

Related Posts