கொரோனா வைரஸ் தொற்று – இலங்கையர்கள் மூவர் அங்கொடையில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்ற சந்தேகத்தில், சீனாவிலிருந்து நாடு திரும்பிய மூன்று இலங்கையர்கள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) அங்கொடை வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த நிலையில், இவ்வாறு சந்தேகத்தின் பேரில் அனமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

எனினும் அவர்களுக்கு அந்த தொற்று இருப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என குறித்த வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

அத்துடன் இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவரே கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த சீனப் பெண்ணுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு அவர் தற்போது குணமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும் குறித்த சீனப் பெண், தொடர்பாக சில பரிசோதனைகளின் முடிவு இன்று பெரும்பாலும் கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் சீனப் பெண்ணை வைத்தியசாலையிலிருந்து வெளியேற அனுமதிப்பது குறித்த தீர்மானத்தை சிகிச்சையளித்த வைத்தியர்களும் தொற்று நோய் குறித்த விஷேட வைத்திய நிபுணர்களும் இணைந்து பேசி முடிவெடுப்பர் எனவும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் லக்ஷ்மன் கம்பல்த் தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் பூர்வீகமாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகரிலிலுந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கையர்கள் தொடர்ந்தும் தியத்தலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள விஷேட தொற்று நோய் கண்காணிப்பு மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

எனினும் இதுவரையில் அவர்களுக்கு கொரோனா தாக்கம் உள்ளமை தொடர்பாக சந்தேகிக்கும்படியான எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் லக்ஷ்மன் கம்பல்த் மேலும் தெரிவித்தார்.

Related Posts