கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பிரிட்டனில் ஆரம்பம்

கொரோனா வைரஸ் மருந்தினை மனிதர்களில் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பிரிட்டனில் இன்று ஆரம்பமாகியுள்ளன.

ஒக்ஸ்போர்ட்டில் இரு தொண்டர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் 800 பேரிற்கு பரிசோதனை மருந்துகளை வழங்கவுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு வகையான மருந்துகளை இரு குழுக்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கவுள்ளதாகவும் ஒரு குழுவினரிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கவுள்ளதாகவும் மற்றைய குழுவினரிற்கு மூளைக்காய்ச்சல் வருவதை தடுக்கும் ஆனால் கொரோனா வைரசினை தடுக்காத மருந்தொன்றினை வழங்கவுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொண்டர்களிற்கு எந்த மருந்து வழங்கப்படுகின்றது என்பது தெரியாத விதத்திலேயே இந்த பரிசோதனைகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான் ஒரு விஞ்ஞானி எங்கெல்லாம் விஞ்ஞான முயற்சிகளிற்கு நான் ஆதரவை வழங்கவிரும்புகின்றேன் என இன்று மருந்து வழங்கப்பட்ட இருவரில் ஒருவரான எலிசா கிரனட்டோ தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட மருந்தினை ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் உள்ள குழுவொன்று தயாரித்துள்ளது.

தனிப்பட்ட ரீதியில் நான் இந்த மருந்து குறித்து நம்பிக்கை கொண்டுள்ளேன் என ஆய்விற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் சரா கில்பேர்ட் தெரிவித்துள்ளார்.

எனினும் நாங்கள் இதனை மனிதர்களில் பரிசோதிக்கவேண்டும், தரவுகளை எடுக்கவேண்டும்,இது பலனளிக்கின்றது என நிருபிக்கவேண்டும்,இதன் பின்னரே மக்கள் மத்தியில் அதனை பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts