கொரோனா வைரஸ் உணவு பொருட்கள் ஊடாக பரவாது: சுகாதார அமைச்சு!!

கொரோனா வைரஸ் எந்தவொரு உணவு பொருட்கள் ஊடாகவும் பரவாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளியின் சளி உடலுக்குள் சென்று, தும்மல் அல்லது வேறு வழிகளில் நோயாளியின் தொற்று, வேறு ஒருவரின் உடலுக்குள் செல்வதன் காரணமாகவே கொரோனா வைரஸ் தொற்று பரவுவதாக சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை தற்போது தியத்தலாவை இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரில் இருந்து அழைத்துவரப்பட்டுள்ள மாணவர்களில் எவருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை என மேலதிக பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

எனினும் 33 மாணவர்களும் நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தி அவர்களின் உடல் வெப்பநிலை குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.

பரிசோதனை தரவுகள், வைபர் மற்றும் வட்சப் ஊடாக மருத்துவர்களின் கண்காணிப்பிற்காக அனுப்பப்படுவதாக இராணுவ தலைமையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸூடன் இலங்கையில் இனங்காணப்பட்ட சீன பெண் முழுமையாக குணமடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவில் ஒரு வார காலத்திற்குள் 71 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts