கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு – சாதாரணமாக கருத முடியாதென்கிறார் இராணுவத்தளபதி

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்களிடமிருந்து சமூகத்தில் கொவிட்-19 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா , கடந்த 24 மணித்தியாலங்களில் 53 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையை சாதாரணமாகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படவில்லை என்றும் , அது போன்ற சூழலை மேலும் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

சாலியபுர கஜபா படையணி முகாமில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை புதிய கட்டடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனைவரும் நாட்டுக்கு அழைத்து வரப்பட வேண்டும். எனினும் அது மிகவும் தெளிவான முறைமைக்கு அமையவே முன்னெடுக்கப்படுகிறது. விமானமொன்றில் ஒரு தடவையில் 200 – 300 பயணிகளே அழைத்து வரப்படுகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வைரஸ் பரவக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதால் குறித்த எண்ணிக்கையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று 53 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படுவதை முற்றாக கட்டுப்படுத்தியுள்ளோம். அதே போன்ற சூழலை தொடர்ந்தும் உறுதிப்படுத்த வேண்டும்.

கொரோனா முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக எண்ணி பொது மக்கள் பல இடங்களிலும் பாதுகாப்பின்றி நடமாடுவது கவலைக்குரிய விடயமாகும்.

இது வரையில் சமூகத்தில் கொரோனா பரவவில்லை. நாம் பாரிய அர்ப்பணிப்புக்களினால் இந்த நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றோம். உலகில் கொவிட்-19 கட்டுப்படுத்தலில் வெற்றிகரமான நாடு இலங்கையாகும்.

எனினும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களில் பெருமளவானவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளதன் காரணமாகவே எமது நாட்டின் பெயர் வெளிவரவில்லை. ஆரம்ப காலங்களில் பின்பற்றியதைப் போலவே தற்போதும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்றுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

Related Posts