யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஆறு பேர் தொலைபேசியை நிறுத்திவைத்து தலைமறைவாகியுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர்கள் ஆறு பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என அறியப்பட்ட வெள்ளவத்தை உணவக உரிமையாளர் மற்றும் அவருடன் பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவரும் என நால்வர் NCG என்ற பெயர்கொண்ட WP-NC 8760 என்ற இலக்கமுடைய பேருந்தில் கொழும்பிலிருந்து கடந்த 25ஆம் திகதி இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கு பயணித்துள்ளனர்.
அவர்கள் நால்வரும் மறுநாள் 26ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை அடைந்துள்ளனர். அங்கிருந்து உணவக உரிமையாளர் முச்சக்கர வண்டியில் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். பணியாளர்களும் முச்சக்கர வண்டியில் வேலணை, புங்குடுதீவுக்குப் புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்பட்ட NCG என்ற பெயர்கொண்ட WP NC 8760 என்ற இலக்கமுடைய பேருந்தில் பயணித்தவர்கள் சமூக அக்கறையுடன் உடனடியாக சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன், பேருந்து சேவை நிறுவனத்திடமிருந்து பயணித்தவர்களின் தொலைபேசி இலக்கம் பெறப்பட்டு சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர். அவ்வாறு 37 பயணிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
அத்துடன், சாரதியும் நடத்துனரும் கொழும்பில் தங்கியுள்ள நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். எனினும், அந்தப் பேருந்தில் பயணித்த ஆறு பேர் தலைமறைவாகியுள்ளனர்.
அவர்கள், ஆறு பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.