கொரோனா தொற்றால் இலங்கையில் 10வதாக உயிரிழந்த பெண்ணின் உடல் இழுபறிக்கு மத்தியில் தகனம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 51 வயதுடைய கம்பஹா, பயாகலையை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று காலை திடீரென உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை திடீரென சுகயீனமுற்ற அவரை, இராணுவம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது இந்த உயிரிழப்பு நடந்துள்ளதாக சீனக்குடா பொலிசாருக்கு இராணுவம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, மேற்கொண்ட கொரோனா பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்த 10 ஆவது நபரின் சடலம் நேற்று இரவு 10 மணிக்கு உரிய சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருந்து பொதுமயானத்திற்கு எடுத்துவரப்பட்ட சடலம் மயானத்தில் ஏற்பட்ட சிறிய ஒரு மணிநேர தாமதத்தின் பின்னர் தகனம் செய்யப்பட்டுள்ளது.

மயானத்தில் கடமையாற்றும் ஊழியர் தனக்கு பாதுகாப்பு அங்கிகள் ஏதுவும் இன்மையால் தன்னால் ஒத்துழைப்பு வழங்க முடியாதென தெரிவித்த நிலையில் குறித்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் குறித்த மயான ஊழியருக்கு பாதுகாப்பு அங்கி வழங்கப்பட்டு தகனம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பெரும் இழுபறிகளுக்குப் பின்னர் குறித்த சடலம் தகனம் செய்யப்பட்ட போதிலும் இறந்தவரின் உறவினர்கள் எவரும் இறுதிக்கிரியையில் பங்கேற்கவில்லை.

Related Posts