கொரோனா தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பாக அரசாங்கம் அவதானம்!

பொது இடங்களுக்குப் பிரவேசிப்பதற்காக, கொரோனா தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பாக அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதியும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது, கருத்து தெரிவித்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், கனடாவில் பொது இடங்களுக்குப் பிரவேசிக்கும்போது, கொரோனா தடுப்பூசி அட்டையைக்கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொற்றிலிருந்து பாதுகாக்கவும் ஏனையவர்களுக்கும் அது பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பூஸ்டர் தடுப்பூசி ஏற்றத்தை, இலங்கையர்களுக்கு வழங்க ஆரம்பித்தமை மிக சிறந்த நடவடிக்கையாகும் என்றும் எதிர்காலத்தில் அது ஏனைய தரப்பினருக்கும் வழங்கப்படுமாயின் சிறந்ததாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து கருத்து தெரிவிக்கும்போதே, ஐரோப்பிய நாடுகளில் பொது இடங்களுக்குத் தடுப்பூசி அட்டையைக் கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதனை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Related Posts