கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் பணம் அறவிடப்படுகிறதா? – இராணுவத் தளபதி விளக்கம்

மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறிவிடப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் நாளாந்தம் வழங்கப்படும் உணவிற்காக பணம் செலுத்த வேண்டியுள்ளமை தொடர்பாக அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.

அவர்களுக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டியுள்ளதுடன், அதற்காக 14 நாட்களுக்கு மூன்று வேளை உணவை பெற்றுக்கொள்ள 7500 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ள மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து அமைதியற்ற விதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையிலேயே, கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறிவிடப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாகவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனானையிலும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள கண்டகாடு மறுவாழ்வு நிலையத்திலுமே இந்த தடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று தொடக்கம் இந்த தடுப்பு நிலையங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன.
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, இந்த தடுப்பு நிலையங்களுக்குச் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்தார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களை இரண்டு வாரங்கள் தடுத்து வைத்து நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்காக இந்த இரண்டு தடுப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பு நிலையங்களில், 2000 தொடக்கம் 2500 பேரை, இரண்டு வாரங்கள் தங்க வைத்து கண்காணிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அவசரகால நிலமைகள் ஏற்பட்டால், தியத்தலாவ இராணுவ முகாமில் மேலும் 300 பேரை தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புனானையில் அமைந்துள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திலும், கண்டகாடு மறுவாழ்வு நிலையத்திலும், இந்த தடுப்பு நிலையங்களை அமைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இங்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகள், வை-பை தொடர்பாடல் வசதிகள், சலவை வசதிகள், பொழுதுபோக்கு வசதிகள், செய்யப்பட்டுள்ளன.

தென்கொரியா, ஈரான், இத்தாலிய ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் இங்கு தங்க வைக்கப்படவுள்ளனர். இராணுவத் தளபதியின் நேரடி கண்காணிப்பில் இந்த தடுப்பு நிலையங்கள் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts