கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர், வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு சுகாதாரத் துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய மூடப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணைக்காக நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டு, தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கு கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிளிநொச்சிப் பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இவ்வாறு இன்று முதல் மூடப்படுகின்றது.
இதேவேளை ஹற்றன் கல்வி வலயத்திலுள்ள ஹற்றன் வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயம், ஆக்ரோயா தமிழ் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் நேற்று திறக்கப்படவில்லை.
இப்பகுதிகளில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே பாடசாலைகள் திறக்கப்படவில்லை. அத்துடன், இப்பகுதிகளில் இருந்து வேறு பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களை வீட்டில் இருந்தே கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.