கொரோனாத் தொற்றில் இருந்து மீண்டமைக்கு நன்றியாக மாசற்ற சுவாசத்திற்காக மரங்களை நாட்டுவோம்- யமுனாநந்தா

கொரோனாத் தொற்றில் இருந்து மீண்டமைக்கு நன்றியாக மாசற்ற சுவாசத்திற்காக மரங்களை நாட்டுவோம் என வைத்தியர் சி. யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “கொரோனாத் தொற்றுத் தொடர்பாக தமிழில் விழிப்புணர்வினை ஏற்படுத்திய அனைத்து சமூக ஊடகங்களுக்கும் நன்றிகள்.

உலக அளவில் பரவிய இப்பாரிய தொற்றின்போது மக்கள் மேற்கொள்ள வேண்டிய முற்காப்பு நடவடிக்கைகள் சமூக ஊடகங்கள் மூலமே விரைவாக மக்களிடம் சென்றடைந்தன. இதனூடாக பல்லாயிரக் கணக்கானோரின் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டது.

மேலும் தடுப்பு மருந்து ஏற்றுவதிலும் மக்களுக்கு ஆரோக்கியமான கருத்துக்களை சமூக ஊடகங்கள் வழங்கி இருந்தன. இதனால் பெருமளவான மக்கள் அச்சமின்றி தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்டனர்.

எதிர்வரும் வாரங்களில் 12 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி மருந்துகளையும் செவ்வனே மேற்கொள்வதனால் கொரோனாத் தொற்றிலிருந்து மட்டுமல்லாது கொரோனாத் தொற்றின் சமூகத் தாக்கத்தில் இருந்தும் நாம் விடுபடலாம்.

கொரோனாத் தொற்றின்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியில் ஒட்சிசன் வாயு கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

ஆகவே கொரோனாத் தொற்றில் இருந்து மீண்டவர்கள், இதற்கு நன்றியாக பூமியில் ஒரு தாவரத்தினை நாட்டுவதனால் இயற்கையாக உள்ள ஒட்சிசனின் அளவை அதிகரிக்கவும் பூகோளம் வெப்பமடைதலைத் தவிர்க்கவும் உதவலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts