3 நாள் போலீஸ் விசாரணையின்போது நள்ளிரவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு போலீஸார் ராம்குமாரை அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து தான் சுவாதியைக் கொலை செய்தது எப்படி என்று ராம்குமார் நடித்துக் காட்டியதாகவும் போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் காவல்துறை வெளியிடவில்லை.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை ஜூலை 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துப் போலீஸார் விசாரித்தனர். அப்போது சுவாதியின் நண்பர் பிலால் சித்திக் குறித்து சில தகவல்களை ராம்குமார் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அவரையும் நேரில் வர வைத்து நேருக்கு நேர் அமர வைத்து விசாரணை நடத்தினர். இந்த நேருக்கு நேர் விசாரணை பல மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ராம்குமாரை போலீஸார் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கோ அல்லது அவர் தங்கியிருந்த மேன்ஷனுக்கோ அழைத்துச் செல்லவில்லை. இருப்பினும் நள்ளிரவில் அவரை அழைத்துச் சென்று நடித்துக் காட்டக் கூறி வீடியோவில் படமாக்கியதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது 13ம் தேதி நள்ளிரவுக்கு மேல் ராம்குமாரை போலீஸார் கூட்டிச் சென்றனர். யாரும் இல்லாத நேரமாக பார்த்து கூட்டிச் சென்றுள்ளனர். ஆட்கள் இருக்கும்போது கூட்டிச் சென்றால் பெரும் கூட்டம் கூடி விடும் என்பதால் இப்படியாம். பின்னர் அங்கு வைத்து சுவாதியைக் கொலை செய்தது எப்படி என்பது குறித்து ராம்குமார் நடித்துக் காட்டினாராம்.
கொலைக்கு முன்பு தான் வந்த வழி, சுவாதியை வெட்டியது, வெட்டு எப்படி விழுந்தது, எத்தனை முறை வெட்டினார், பின்னர் எப்படி ஓடினார், அரிவாளை என்ன செய்தார், மேன்ஷனுக்கு திரும்ப எந்த வழியாகப் போனார் என்பது உள்ளிட்டவற்றை ராம்குமார் நடித்துக் காட்டினாராம். இது வீடியோவில் பதிவு செய்யப்பட்டதாம்.
இருப்பினும் இதுகுறித்து போலீஸ் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.