கொண்டயா விடுதலை

கம்பஹா கொட்டதெனியா பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி சேயா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சேயா கொலை வழக்கு இன்று (திங்கட்கிழமை) மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார். அத்துடன், கொலையுடன் தொடர்புடைய கொண்டயாவின் அண்ணனை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சேயா கொலை தொடர்பில் ஏற்கனவே மாணவன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் மரபணு பொருந்தாத நிலையில் விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் கைதுசெய்யப்பட்ட கொண்டயாவின் மரபணுவும் பொருந்தவில்லையென கடந்த வழக்கு விசாரணையின்போது குற்றப்பலனாய்வு பிரிவினரால், மன்றில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், கொண்டயாவின் அண்ணான சமன் ஜயலத்தின் மரபணு பொருந்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கிலிருந்து கொண்டயா விடுதலை செய்யப்பட்டாலும், அவர் வேறு பல வழக்குகளுக்காக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமல் போன சிறுமி சேயா, பின்னர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts