முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் இரண்டாவது பிரதான வாயில் முன்னால் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனி இரவையும் தாண்டி இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ளது.
விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை நேற்று விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது நேற்றைய தினம் விடுவிக்கப்படவில்லை.
இதன்காரணமாக நேற்று மாலை முதல் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு குடியிருப்பு மக்கள் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில் சுமார் 80 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் காணிகள் நேற்று விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அக்காணிகளுக்குரிய குடும்பங்களும் கிராம அலுவலரும் அப்பகுதிக்குச் சென்றிருந்தனர். ஆனால் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குரிய காணி உத்தியோகத்தர்கள் வருகை தரவில்லை.
இதன் பின்னர் காணி அளவீடு செய்வதற்காக வன வள திணைக்கள அதிகாரிகள் காணி அமைந்துள்ள பகுதிக்கு சென்றிருந்த போதிலும் உயர் அதிகாரிகள் வருகை தராமைக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையினால் பதற்ற நிலை தோன்றியது.
மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதாக மக்கள் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியதோடு விசனத்தையும் தெரிவித்தனர். அத்தோடு தாம் தொடர்ந்தும் தமது நிலம் கிடைக்கும் வரை போராட்டத்திலீடுபடப் போவதாகவும் தெரிவித்த மக்கள், விமானப்படை முகாமுக்கு முன்பாக பந்தல் அமைத்து நேற்று இரவுமுதல் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றுகாலை குறித்த பகுதிக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோரும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.