கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு!

கொட்டாஞ்சேனை புளூமென்டல் வீதியில் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில், பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் மரணமாகியுள்ளார்.

அதேவேளை, மேலும் 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், கொழும்பு தேசிய மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் கறுப்பு நிற ஹைப்ரிட் கார் ஒன்று புளுமெண்டல் பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

புளுமெண்டல் பகுதியில் உள்ள கட்டிடமொன்றின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது. எனினும் காரின் உரிமையாளர் யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு வெள்ளை நிற வான் இதுவரை கைப்பற்றப்படவில்லை.

Related Posts