காணாமல் போனவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக நீண்ட காலம் சிறையில் வாடுவோர் பாலியல் வன்மத்துக்கு ஆளாக்கப்படுவோர் என்ற கொடுமைகள் மலிந்த இடமாக வன்னி ஆகிவிட்டது.
இதற்கு உடன்பரிகாரம் காணப்படவில்லையாயின் தீர்வு கிடைத்தும் அர்த்தமற்றதாகி விடும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
நிபுணர் குழு விசாரணை முன்சாட்சியமளிக்கும் சூழ்நிலை பற்றியும் தென்னாபிரிக்க உபஜனாதிபதி ரமபோஷாவின் வருகை சம்பந்தமாகவும் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;
வட மாகாணத்தில் மாத்திரம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களின் உறவினர்கள் அனைவரும் சுதந்திரமாக வாய்ப்பளிக்கக் கூடிய நிலையொன்று கொண்டு வரப்படுமா? முள்ளிவாய்க்கால் யுத்த முடிவின் போது இராணுவத்திடம் உறவினர்கள் பலரை ஒப்படைத்துள்ளனர். அவர்களின் நிலையென்ன? வடக்கு கிழக்கு மற்றும் வெளியே கொழும்பு உட்பட வெள்ளைவானில் கடத்தப்பட்டோரின் பட்டியல் நீண்டதாக இருக்கிறது. இது தவிர அரசியல் கைதிகள் போருக்கு முன்னும் பின்னும் நீண்ட காலமாக சிறையில் வாடுவோர் என்ற வகையில் ஆயிரக் கணக்கானோர் உள்ளனர். இவர்கள் பற்றியெல்லாம் விசாரணையின் போது கவனம் கொள்ளப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. அது மட்டுமின்றி தென்னாபிரிக்காவின் தூதுக் குழுவினரும் இது பற்றி பேச்சுவார்த்தை நடாத்தி உடன் தீர்வு காணப்படவில்லையாயின் அரசியல் தீர்வொன்று கிடைக்கப்பெறின் அதை எப்படி அர்த்தமுள்ளதாக்கப் போகிறோமென்று தெரியவில்லை.
விசாரணையென்ற ஒன்று வரும் போது அதற்கு முன்பாதிக்கப்பட்டவர்களுக்கு சாட்சியமளிக்க அனுமதி வழங்க வேண்டும். அவர்களின் அடிப்படை உரிமை தமது பிள்ளைகளையும் கணவர்மாரையும் இராணுவத்திடமும் பொலிஸாரிடமும் ஒப்படைத்தவர்கள் தமது உறவினர்களைக் காணவில்லை உரிய தீர்வு காணப்பட வேண்டுமென சொல்வதற்கு உரிமையுண்டு. நீதிமன்றில் நீதி கோருவது போன்ற விடயமே. விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிப்பதாகும்.