அயல் வீட்டு புதுமனைப்புகு விழாவுக்கு வழங்கிய 1,000 ரூபாய் மொய்ப்பணத்தை திரும்பத் தருமாறு கோரி அயல் வீட்டுப் பெண்ணை தாக்கிய, மற்றொரு பெண் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (09) பொலிஸ் நிலைத்தில முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அச்சுவேலி பத்தமேனி பாரதி வீதியைச் சேர்ந்த பெண்ணொருவர் அயல் வீட்டில் அண்மையில் நடைபெற்ற புதுமனைப்புகு விழாவுக்குச் சென்று 1,000 ரூபாய் மொய்ப்பணம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் மொய்ப்பணம் கொடுத்த பெண் வீடு ஒன்றைக் கட்டி வந்துள்ளார். வீட்டை மேற்கொண்டு கட்டுவதற்கு காசு இல்லாமையால் இடைநடுவில் கைவிட்டார்.
இதனையடுத்து, குறித்த பெண் தனது வீடு கட்டி முடித்து புதுமனைப்புகு விழா நடத்தினாலேயே அயல் வீட்டுக்காரருக்கு தான் கொடுத்த மொய்ப்பணம் திரும்ப தனக்கு கிடைக்கும் என்பதை உணர்ந்து, தன்னால் அந்த விழாவை நடத்த முடியாது என்பதனால், தான் முன்னர் வழங்கிய மொய்ப்பணத்தைத் திரும்பத் தரும்படி கேட்டு அயல் வீட்டுப் பெண்ணுடன் சண்டையிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது மொய்ப்பணத்தை திரும்ப தருமாறு கோரி அயல் வீட்டுப் பெண்ணை கடுமையாகத் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்காகிய பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.