கொடிகாம் மற்றும் வடமராட்சியில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்ற முற்பட்டபோது இராணுவத்தினர் அதனை தடுத்தி நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து இராணுவ முகாமுக்கு அருகில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இறுதிப் போரில் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவுதின நிகழ்வுகள் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று (புதன்கிழமை) நினைவுகூரப்பட்டு வருகிறது.
அதற்கமைய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் குறித்த பகுதியில் சுடரேற்ற முற்பட்டபோது இராணுவ முகாமினுள் இருந்து வந்த இராணுவத்தினர் இப்பகுதியில் சுடரேற்ற வேண்டாம் என கூறி அதனை தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து முகாமிற்கு அருகில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது
மேலும் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த காணியில் தற்போது படையினர் பாரிய இராணுவ முகாமை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக சுடரேற்ற முற்பட்டபோது இராணுவத்தினர் அதனை தடுத்தி நிறுத்தியுள்ளனர்.
அதன்பின்னர் அங்கும் இராணுவ முகாமுக்கு அருகில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமராட்சி எல்லங்குளம் துயிலும் இல்லம் இடித்து அழிக்கப்பட்ட பின்னர் அங்கு தற்போது படையினர் பாரிய இராணுவ முகாமை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.