கொடிகாமம் சந்தை பகுதியில் மலகூட கழிவு நீர் வீதியில்..! பிரதேசசபைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

சாவகச்சேரி பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மாடியிலிருந்து இறங்க விடாமல் தடுத்து கொடிகாமம் நகர்ப் பகுதி வர்த்தகர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

பிரதேச சபையின் விசேட கூட்டம் நேற்று பிரதேச சபை மேல்மாடியில் இடம்பெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வர முயன்ற தலைவரையும் உறுப்பினர்களையும் கீழே இறங்க விடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர்.

கொடிகாமம் சந்தையில் உள்ள மலகூடத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள வீதியில் வெள்ளமாக காணப்படுகிறது.

இதனால் அந்த வீதியைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதனைப் புனரமைத்துத் தருமாறு வர்த்தகர்களும், பொதுமக்களும் பல தடவைகள் பிரதேச சபையிடம் கோரியுள்ளனர்.

அதற்குத் தீர்வு கிடைக்காத நிலையில் நேற்றுக் காலை சிறுவன் ஒருவன் அந்த கழிவுநீர் தேங்கியுள்ள பகுதிக்குள் வீழ்ந்துள்ளான்.

இதனால் ஆத்திரமுற்ற வர்த்தகர்களும், பொதுமக்களும் நேற்று பிரதேச சபை கூட்டம் நடைபெறுவதை அறிந்து தலைவரையும் உறுப்பினர்களையும் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கடிதம் மூலம் கேட்டிருந்தனர். கூட்டம் முடியும் வரை வெளியில் காத்திருந்தனர்.

இந்தக் கடிதம் பற்றி கூட்டத்தில் ஆராயப்படாமல் கூட்டம் முடிவுற்றதாலும் தலைவர், உறுப்பினர்களைச் சந்திக்க திங்கட்கிழமை வருமாறும் அறிவித்ததாலும் ஆத்திரமடைந்த வர்த்தகர்களும் பொதுமக்களும் மாடிப்படிகளை வழிமறித்து மலகூடத்தை உடனடியாக திருத்தித் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைவர் மலகூடத்தை திருத்துவதற்கு ஒரு வார கால அவகாசம் கோரிய போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அதற்கு இணங்கவில்லை. வாக்குவாதம் அதிகரித்தது.

இதன்பின்னர் நிலைமை மோசமடையவே சபை உறுப்பினர்கள் மக்களின் கோரிக்கையைப் பொறுப்பெடுத்து தற்காலிக ஏற்பாடுகள் மேற்கொள்வதாக கூறினர்.

இதனை அடுத்து பொதுமக்களும், வர்த்தகர்களும் கலைந்து சென்றனர்.

இதேவேளை சந்தையில் உள்ள மலகூடத்தை பார்வையிடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்தபோது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் எவரும் செவிசாய்க்கவில்லை.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூவர் மலகூடத்தைச் சென்று பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக வர்த்தகர்களுக்கு உறுதியளித்தனர்.

உடைந்து போயுள்ள குழாயை திருத்த மதிப்பீடு தயாரித்து அனுமதி பெற வேண்டுமா என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related Posts