கொஞ்சம்கூட இரக்கமற்ற யாழ்ப்பாணச் சமூகம் எப்போது திருந்தும்?

இன்று (13.11.2019) புதன்கிழமை நடந்த சம்பவம் என்னை ஆத்திரம் கொள்ள வைத்தது. இன்று நேற்றல்ல பலநாட்களாக பிரயாணத்தின்போது நடக்கின்ற நிகழ்வுகள்!

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தவர்கள் என்றால் – மற்றவர்களுக்காக பரிவு காட்டும் ஒரு சமூகம் என்று பலராலும் கொண்டாடிய சமூகம் இன்று ஏனோ சுயநலமுடையதாக மாறிவிட்டது. பகிர்ந்து விட்டுக்கொடுத்து பெரியவர்களை கனம் பண்ணிய எமக்கு இதைப் பார்க்கும்போது எரிச்சலும் கோபமும் வருகிறது! இன்றைய சமூகத்தினருக்கு வழிகாட்டும் ஒரு பொறுப்பை நாம் இழந்துவிட்டோமா? என எண்ணத் தோன்றுகிறது!

பாடசாலைகள் முடிந்தவுடன் எமக்கு போகும்வழி எப்படி இருக்க வேண்டும் என்றுகூறியதை நாம் இப்போதும் நடைமுறைப்படுத்தினாலும் பெரும்பாலானவர்கள் வாகனம் போகும் திசையிலேயே போகிறார்கள்! வலப்பக்கமாக போவது யாரும் கிடையாது. பல்கலைக் கழக மாணவர்களும் அதேபோலத்தான்!

அண்மையில் ஒருநாள் எனது உறவினர் வீட்டுக்குச் சென்றபோது படலை மூடப்பட்டு பூட்டுப் போடப்பட்டிருந்தது. பல தடவைகள் கூப்பிட்டுப்பார்த்தும் யாரும் வெளியே வந்து விசாரிக்கவில்லை! உள்ளேயிருந்தபடி பதிலும் கூறாமல் ஒருவரையொருவர் பார்த்தவண்ணமிருந்தனர். எனக்கு வந்த ஆத்திரத்துக்கு கத்திப் போட்டு வந்தேன்!
இன்று நடந்த சம்பவத்தை நான் பகிராமல் விட்டுவிட்டால் நான் மனிதனாயிருப்பதில் அர்த்தமே இல்லை!

782/4 இலக்கப் பேரூந்து ஒன்று ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு காரைநகரிலிருந்து எமது ஊரால் சுழிபுரம் சித்தங்கேணி சங்கானை சண்டிலிப்பாய் சங்குவேலி உடுவில் மருதனார்மடம் வழியாக யாழ்ப்பாணம் செல்வது வழமை! நாச்சிமார் கோவிலடிக்கு இதில் வருவது எனக்கு சுலபமாகையால் இதில் வந்துசெல்கிறேன்.

இன்று காலையில் நான் எமது மூளாய்ப் பிள்ளையார் கோவிலடியில் ஏறி அமர ஆசனம் கிடைத்தது. பல மாணவர்கள் சுழிபுரம் பண்ணாகம் போபவர்கள் கூட இருந்தனர். சண்டிலிப்பாய் வரும்போது ஒருளவு கூட்டம். சங்குவேலியிலிருந்து ஒரு சிவபூமி மாணவன் வழமையாக வருவதுபோல இன்றும் ஏறிக்கொண்டான். வழமையாக அவருக்கு ஆசனம் வழங்குபவர்கள் இன்று அவருக்கு நீண்டநேரமாகியும் ஆசனம் வழங்கவில்லை! இடையில் உடுவில் மகளிர் கல்லூரிக்கு முதல் இறக்கத்தில் இறங்கவேண்டிய ஒரு வயதுபோன பெண்மணி பின்புறம் இறங்காமல் முன்னால் இறங்க முயற்சித்தும் அவரால் அந்த நிறுத்ததில் இறங்க முடியவில்லை! உடுவில் பெண்கள் கல்லூரியிலேயே அந்தப் பெண்மணி இறக்கப்பட்டார். அதன்பின் இருக்கை கிடைத்த அந்த சிவபூமி மாணவன் கோவில் வாசலிலிருந்து முன்பக்கமாக இறங்க முயற்சித்தும் எவரும் வழிவிடவில்லை. அவர் இறங்க வேண்டிய கோண்டாவில் உப்புமடம் சந்தியில் எவ்வளவோ முயற்சித்தும் அவரை இறக்கியது ஏறக்குறைய 200 மீற்றர் கடந்து தாவடிச் சந்திக்கு அண்மித்தபோதுதான். நடத்துனருக்கு நான் கூறியும் ஏனோதானோ என அசட்டையாக இருந்தார். 2 சந்தர்ப்பங்களில் நடத்துனர் முன்னே போகும்படி கூறியும் இருக்கையில் இருந்த ஒருவருடன் ஒரு இளம்பெண் பேசிக்கொண்டிருந்தார். சாரதிக்கு அண்மித்த பகுதியில் இடமிருந்தும் நான் அந்த சிறுவனுக்க வழிவிடும்படி கூறியதால் என்னையே முறைத்து முறைத்து பார்த்துக்கொண்டு ஏதோ சொல்லியபடி இடத்தைவிட்டு அகலாது நின்றார். இன்னுமொருவர் வழமையான 782 வழித்தடத்தில் ஏறாது இந்தப் பேரூந்தில் ஏறி நடத்துனருடன் விவாதித்துக் கொண்டிருந்தார். ஒரு மணிநேரப் பயணத்தின்போது எமக்கு ஏற்படாத விட்டுக்கொடுப்பு எப்படி வாழ்நாளில் ஏற்படப் போகிறது?

சிறுவயதில் நாம் கற்ற மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்பதற்கு அமைவாக நான் பல தடவைகள் பிரயாணம் செய்யும்போது புகையிரதத்தில் எனது இருக்கையை அனுராதபுரத்தின் பின் விட்டுக்கொடுப்பது வழக்கம்! ஏன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி 1980களிலும் சரி இன்றும் சரி, வரும்போதே நாம் எமது இருக்கைகளை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு நின்றநிலையில் வந்திருக்கிறோம். கடந்த வருடம்கூட ஒரு போயாதினதிற்கு மறுநாள் அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்றபோது அனுராதபுரத்தில் ஏறிய பெருமளவான வயோதிபர்கள் நிற்க இளைய படையினர் உட்பட பலர் இருந்தபோது, நான் உரத்தே சத்தமிட்டேன்! புத்தர் போதித்த பரிவு இரக்கம் எம்மிடத்தில் இல்லை என்று! உடனேயே பலர் எழுந்து இடம்கொடுத்து உதவினார்கள்!
இன்று பிரயாணத்தின்போது ஏறுபவர்கள் தாங்கள் நிற்கும் இடங்கள் ஏதோ தமக்கு எழுதிவைத்த உறுதிக் காணிபோல அசையாது அதேயிடத்தில் இரும்புப்பிடி பிடித்து நிற்பார்கள்! மற்றவர்களுக்கு வழிவிடவேண்டும் என்ற ஒரு சாதாரண அறிவு கூட இல்லாத மிருகங்கள் போல, தாம் தோளில் போட்டிருக்கும் பைகளைக் கூட கழற்றி வைக்காது, இடையூறு செய்வது பழக்கமாகிவிட்டது. அடுத்தவன் இருந்தாலென்ன அவனுடைய தலையில் இடித்தாலென்ன என்பது போல் தமது பைகளை தோழிலே மாட்டியபடி ஆசனத்தில் சாய்ந்கு வருபவர்களின் தொல்லை சொல்லில் அடங்காது! இரண்டு கால்களிலும் நிற்கத் தெரியாதவர்கள் பலர் இருக்கிறார்கள் – அவர்கள் சாய்வதற்கு மற்றவர்களின் தோள் தேவையாயிருக்கிறது!

பேரூந்துகளில் முன்னர் ஏறும்வழி இறங்கும் வழி என்ற அறிவுறுத்தல்கள் இருந்தது! இப்போது அவையும் இல்லை! எல்லோரும் தனியார் பேரூந்துகளில் ஏறுவதுபோல முன்பக்கத்தால் ஏறுவதும், இறங்கும்போது பின்னால் இறங்குவதும் வழமையாகிவிட்டது! இரட்டைக் கதவுள்ள தனியார் பேரூந்துகள் பின்பக்கக் கதவுகளை மூடி வைத்து முன்பக்கத்தால் இறக்குவதும் நேரம் வீணாவதற்கு காரணமாகிறது! நேரத்தை கருதி வேலைக்குச் செல்லும் பயணிகள் பலர் இந்த நடைமுறையால் அவதிப்படுகிறார்கள்!

பின்னால் நிற்க வேண்டிய நடத்துனர்கள் அரசாங்கப் பேரூந்துகளில் முன்னே சென்று சாரதியுடன் பேசிக் கொண்டிருப்பதும் இதனால் பல பயணிகள் பேரூந்தைத் தவற விடுவதும் இயல்பு! நான் கவனித்திருக்கிறேன். பல பயணிகளைக் கவனிக்காமல் பேரூந்தை விரைவாகச் செலுத்திக் கொண்டும் போவார்கள்! இதில் சிலவேளைகளில் தனியார் பேரூந்தும் அரச பேரூந்தும் போட்டிபோட்டு ஓடும்போது யாரையும் கண்டுகொள்வதே இல்லை! மேலும் இறங்க வேண்டிய இடங்களை விட்டு பல தொலைவு தூரம் கொண்டு சென்று நிறுத்துவதும் உண்டு! வயோதிபர்கள் குழந்தைகள், குழந்தைகளோடுவரும் பெரியவர்கள் ஏறி உட்கார முன்பே இவர்கள் அவசரப்பட்டு பிரயாணப்பதால் பல தடவைகள் பிரயாணிகள் கீழே குழந்தையோடு விழுந்திருக்கிறார்கள்! மேலும் சாரதி அனுமதிப்பத்திரம் பெறும்போது நடைமுறைப்படுத்தவேண்டிய பல நியதி முறைகளிலிருந்து தவறுகிறார்கள். தாங்கள் அதிக வேகத்தில் செல்லும்போது கோயிலோ – வைத்தியசாலையோ பள்ளிக்கூடமோ எதுவரினும் தொடர்ந்து ஒலி எழுப்பி அனைவரையும் ஆத்திரமடையச் செய்கிறார்கள். கொஞ்சத் தூரம் ஊர்ந்து செல்வதும் பின்னர் – பின்னால் ஒரு பேரூந்தைக் கண்டதும் அதிவேகமாக ஓடுவதும் சாதாரணமாகிவிட்டது!
காரைநகர் 786 வழித்தடத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு பேரூந்து என ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிலையில் 782 வழித்தடத்தில் மட்டும் ஓரு நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை! குறித்த போக்குவரத்து பற்றி அரச – தனியார் நிறுவனங்கள் மக்களின் நன்மை கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

782 மானிப்பாய் வழித்தடத்தில் மானிப்பாயூடாக பேரூந்துகளில் ஏறினால் சண்டிலிப்பாயில் தரித்து நின்று பின்னர் ஆமை ஊர்வதுபோல சென்று முன்செல்லும் பேரூந்தைக் கண்டதும் அதனோடு போட்டிபோட்டு ஓடுவார்கள்! இதேபோல 786 வழியில் யாழ்நோக்கிப் போகும்போது மாவடிச் சந்தியில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை தரித்துச் செல்வதும் வழமை!

பகிஷ்கரிப்பு ஹர்த்தால் போன்ற நிகழ்வுகளின்போது சாதாரண பொது மக்கள் – பயணிகள் படும்பாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை! நிகழ்வுகளை நடத்துவோர் சொகுசாக தாம் தத்தமது வாகனங்களில் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்! ஆனால் பொதுமக்கள் படும் இன்னல்களை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும் அவர்களின் பிரச்சினைகளை!

சில நடத்துனர்கள் சரியான இறங்க வேண்டிய இடங்களைக் கேட்காது தமது இஷ்டத்துக்கு ரிக்கற் வழங்கிவிட்டு பின் அவர்கள் இறங்கும்போது அந்த ரிக்கற்றை வாங்கி மற்றவருக்கும் கொடுத்து பண மோசடி செய்வதும் கண்கூடு. சில நடத்துனர்கள் கூட்டம் அதிகமாயுள்ளபோது பணத்தைப் பெற்றுக் கொண்டு ரிக்கற் வழங்காமல்விடுவதும் சகஜம். இதனால் பல தடவைகள் பிரயாணிகள் – நடத்துனர் வாய்த்தர்க்கங்களையும் பார்த்ததுண்டு!

குறிப்பாக மற்றவர்களும் தங்களோடு பயணம் செய்யும் – பொது வாகனம் என்ற வகையில் 6 அறிவு படைத்த மனிதர்களாகிய நாம் மிருகங்களைப் போலல்லாமல் நடந்து கொள்ள வேண்டும்.
ஏராளமானவற்றை எழுதவேண்டும் – இப்போதைக்கு இது சமர்ப்பணம்!

தினந்தோறும் பயணிக்கும் ஒரு சாதாரண பயணியாக இதை சம்பந்தப்பட்டவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

தங்க. முகுந்தன்
மூளாய்

Related Posts