யாழ்ப்பாணம் – கொக்குவில் தலையாழி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 4 மணியளவிலிருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள் எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டைவிட்டு வீதியில் இறங்கவோ இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை.
ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் இருப்பவர்கள் குறித்து பதிவுகள் இடம்பெற்றதோடு வீடுகளும் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டது. அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் சிறிய சுவரொட்டி ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது வன்முறை ஆயுதமொன்று மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஒரு வீட்டினை சோதனையிட்டபோது சைக்கிள் பட்டி மற்றும் அலுமினிய குழாய் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட பாரிய ஆயுதம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஆவா குழுவினைச் சேர்ந்த அசோக் என்பதோடு இவர் யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவரென்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.