உள்நாட்டு பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று (11.09.2023) ஐந்தாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஐந்தாம் நாள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்தது.
அகழ்வு பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மூன்று உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாகவும் ஏற்கனவே மீட்கப்பட்ட இரண்டு உடற்பாகங்களுடன் மொத்தமாக ஐந்து உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் அகழ்வு பணிகள் தொடர்ந்து நாளைய (இன்று) தினமும் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஆவணப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் குற்ற வழக்குகளிலே இவை தான் சாட்சியம். சாட்சியத்தை பெற்று நீதிமன்றத்தின் முன்பாக வைக்கும் வரை ஆவணங்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதிலே சிறிய தவறேதும் ஏற்பட்டால் அது குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு மிகப்பெரிய அளவிலே உதவுகின்ற ஒரு விடயமாக மாறும்.
அந்தவகையிலே எந்தவிதமான ஒளிவுமறைவின்றி காத்திரமான விடயங்களை தேடி ஆவணப்படுத்தல் அத்தியவசியம் என அனைவரும் எதிர்பார்க்கின்றோம்.
புதைகுழி அகழ்வுகள் நடைபெறுகின்ற போது அதனை ஆவணப்படுத்துவதனை தடுத்திருக்கிறார்கள். வேலை தொடங்க முதலும், மதியம் ஓய்வு பெறுகின்ற போதும், மாலை முடிவடைந்த போதும் படங்கள் எடுக்க அனுமதித்திருக்கிறார்களே தவிர சாட்சியங்களை சேகரிப்பதற்குரிய முறைகள் சரியாக நடைபெறுகின்றதா? இல்லையா? என்பதனை உலகத்திற்கு அதனை ஆவணப்படுத்துவதற்கு ஊடகங்களுக்கு அனுமதி கிடையாது.
புதைகுழிகள் கண்டறியப்பட்ட காலப்பகுதியில் இருந்தே கணிசமான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையிலே ஊடகங்கள் செய்திகளை வெளியே கொண்டுவந்ததனால் கணிசமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டதனால் தான் அக்கறை எடுக்கிற அளவிற்கு தெரிய கூடியதாக இருக்கின்றது.
இருப்பினும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது சந்தேகத்தையும், ஏமாற்றத்தையும் கொடுக்கின்ற ஒரு விடயமாகவே இருக்கின்றது. அகழ்வதனை பாதுகாப்பாக நீதிமன்றம் வரை ஆவணப்படுத்தி எந்தவித உடைவுகளும் இல்லாமல் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதுடன் அதேநேரம் அகழ்வு நடைபெற்றதன் பின்னர் ஆய்வு செய்யும் பணி உண்மையில் அனைத்து தரப்பினர்களும் விஷேடமாக பாதிக்கப்பட்ட தரப்புகள் நம்பிக்கையை கொடுக்க கூடிய வகையில் அமைய வேண்டும் என்பது முக்கியமான ஒரு கோரிக்கை.
முக்கியமாக பாதிக்கப்பட்ட தரப்பிலே தமிழ்மக்கள் இருக்கின்ற இடத்தில் தமிழர்களுடைய உடல் தான் இருக்கின்றது என்ற வகையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற குறைந்தளவு நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற வகையிலே குறித்த ஆய்வுகள் நடைபெற வேண்டும் என்பது அத்தியவசியம்.
தமிழ் மக்கள் மத்தியில் உள்நாட்டிலே நம்பகத்தன்மையான , வெளிப்படைத்தன்மையான விடயங்கள் வெளிக்கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை இல்லாத இடத்தில் இவ்விடயம் எவ்வளவு தூரத்திற்கு தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே.
இதனை விளங்கிக் கொண்டு சர்வதேச விசாரணையின் ஊடாகவே மட்டுமே இதனை முடிவுக்கு கொண்டுவரலாம் என்ற விடயத்தை புரிந்து கொண்டு இனியாவது ஐநா மனித உரிமைகள் நடைபெறுகின்ற சூழலிலே இந்த ஐநா மட்டத்திலே பெரிதுபடுத்தி முடிவை எட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.