கைவிடப்பட்டது முதலமைச்சர் நிதியம்

முதலமைச்சர் நிதியத்தை சமகாலத்தில் அமைந்திருக்கும் வடிவத்திலிருந்து கைவிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போதே அவைத்தலைவர் இந்த அறிவிப்பினை விடுத்தார்.

வட மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் உருவாக்கப்பட்ட 3 நியதிச்சட்டங்களில் நிதி நியதிச்சட்டம் மற்றும் முத்திரை கைமாற்று சட்டம் ஆகியன ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தார்.

எனினும் முதலமைச்சர் நிதியத்தை ஆளுநர் முற்றுமுழுதாக நிராகரித்தார். மேலும் குறித்த விடயம் பற்றி தொடர வேண்டுமானால் ஜனாதிபதி, மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

அங்கிருந்து உயர் நீதிமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பில் வழக்குத் தொடரப்படும். தீர்ப்பின் படியே முடிவுகள் எட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

எனவே இவ்வாறான செயற்பாட்டினால் கால நீடிப்பே ஏற்படும் எனவே இதனை சமகால நிலைமைகளின் அடிப்படையிலும், வேறு தேவைகளின் அடிப்படையிலும் முதலமைச்சர் நிதியத்தை கைவிடுவதென தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது பதிலளித்த முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் தொடர்ந்து ஆளுநருடன் முரண்படுவதால் பெரிய அளவில் நன்மைகள் இல்லை. காலத்தை வீணடிக்கும் செயல் எனவே இதனை இத்துடன் நிறுத்திக் கொண்டு மேலும் செயற்படுத்தவுள்ள பல நியதிச்சட்டங்களை உருவாக்கவேண்டியுள்ளது. அவற்றுக்காக செயற்படுவோம்.

எனவே புலி பதுங்குகின்றது என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கும் என்பதுபோல் நாங்கள் பதுங்கியிருப்போம். இது எமது இராஜதந்திரம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது பேசிய உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பதுங்கிப் பதுங்கி சுவர் வரையில் வந்துவிட்டோம். சுவர் முதுகில் முட்டிவிட்டது. இனிமேல் எங்கே பதுங்குவது? என்று கேள்வி எழுப்பியதுடன், ஆளுநருக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய காலம் வரும்.

அப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்புவோம் என்றார். –

Related Posts