தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளை இராணுவம் மிரட்டும் நிலையில், எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாத கையறு நிலையிலேயே தேர்தல்ககள் திணைக்களமும் தேர்தல்கள் ஆணையாளரும் உள்ளனர்.
இதனால்தான் நாம் ஆரம்பம் முதலே, இராணுவத்தை முகாமுக்குள் முடக்க வேண்டும் என்பதை வலியறுத்துகிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
நாவாந்துறையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இராணுவத்தினரின் உதவிப் பொருள்கள் வழங்கும் நிகழ்வில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சி வேட்பாளர் றெமிடியஸ் பங்கெடுத்திருந்தார்.
இதனை அறிந்த தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது குறித்த வேட்பாளர் தலைமறைவானதுடன் அங்கு சென்ற தேர்தல் திணைக்கள அதிகாரிகளையும் படையினர் மிரட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
தேர்தல் காலத்தில் இராணுவப் பிரசன்னம் இருக்கக் கூடாதென்று நாம் இவ்வாறான காரணங்களுக்காகத்தான் முன்னரே வலியுறுத்தியிருந்தோம். நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறாது என்பதற்கு இந்தச் சம்பவம் நல்லதொரு எடுத்துக்காட்டு.
வழமையாகத் தேர்தல் விதிமுறைகளை மீறி நடத்தப்படும் கூட்டம், தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் நிறுத்தப்படும்.
இங்கு இராணுவத்தினரால் கூட்டம் நடத்தப்பட்டமையால் தேர்தல் திணைக்களத்தினராலேயோ, தேர்தல்கள் ஆணையாளராலேயோ எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்க முடியாத கையறு நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் வடமாகாண சபைத் தேர்தல் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். எனவேதான் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் – என்றார்.
தொடர்புடைய செய்தி