கையடக்க தொலைபேசி வாங்கினால் வெங்காயம் இலவசம்!!

தமிழகத்தில், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தொலைபேசி கடைக்காரரின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆடம்பர பொருளான தங்கத்தின் விலையைப் போன்று, மக்களின் அத்தியாவசிய தேவைப் பொருளான வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது.

இந்தியாவில், தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள ‘எஸ்.டி.ஆர் மொபைல்ஸ்’ எனும் தொலைபேசி விற்பனை கடை, ‘ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’ என, அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

பொதுவாக, தொலைபேசி வாங்கும்போது டெம்பர் க்ளாஸ், ஹெட்போன், ஸ்பீக்கர், மெமரி கார்டு, ஹெட்செட் போன்ற பொருட்கள்தான் இலவசமாக வழங்குவது வழக்கம்.

ஆனால், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என்ற தொலைபேசி கடைக்காரரின் இந்த வித்தியாசமான அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related Posts