காவல்துறையால் கைது செய்யப்படும் சந்தேக நபரின் செல்லிடபேசியை பரிசோதனை செய்வதற்கு முன் காவல்துறையினர் அதற்கான உரிய முன் அனுமதியை நீதிமன்றத்திடம் பெறவேண்டும் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்ப்பளித்திருக்கிறது.
மின்னணு யுகத்திலும் தனிமனித அந்தரங்கம் காப்பாற்றப்படவேண்டும் என்று தீர்ப்பளித்த அமெரிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், இதற்காக சில விலைகள் கொடுக்கப்படவேண்டி வரலாம் என்று தெரிவித்திருக்கிறார். குறிப்பாக தமது இந்த தீர்ப்பு குற்றச்செயல்களை எதிர்த்து போராடும் காவல்துறையின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும் என்றும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
அதேசமயம், காவல்துறையினர் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதினாலோ, மற்றவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதினாலோ அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் மட்டும் நீதிமன்றத்தின் முன் அனுமதி ஆணை இல்லாமலே கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் செல்லிடபேசிகளை காவல்துறையினர் பரிசோதிக்கலாம் என்றும் அவர் தமது தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு தனிமனித அந்தரங்க உரிமைகளுக்காக வாதாடுபவர்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் செல்லிடபேசிகள் உள்ளிட்ட மின்னனு சாதனங்களை காவல்துறையினர் நினைத்த மாத்திரத்தில் சோதனை செய்வது கைது செய்யப்படும் சந்தேக நபர்களின் தனிமனித அந்தரங்கத்தில் காவல்துறையினர் செய்யும் தேவையற்ற அதிகபட்ச தலையீடு என்று இவர்கள் வாதாடி வந்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு தமது நியாயமான கோரிக்கைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய சட்டரீதியிலான அங்கீகாரமாக தனிமனித உரிமைகளுக்காக போராடும் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.