திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்த தன்னை வட்டுக்கோட்டைப் பொலிஸார் அடித்து, துன்புறுத்தி காயப்படுத்தியுள்ளனர் என்று சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவர், இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். பிராந்தியக் காரியாலயத்தில் தான் முறைப்பாடு செய்துள்ளார் என்றும் கூறினார்.
தொல்புரம் மத்தி சுழிபுரத்தைச் சேர்ந்த முருகேசு தயாநந்தன் (வயது 30) தனது உடலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தக் காயங்கள் பொலிஸார் தாக்கியதால் ஏற்பட்டவை என்று அவர் கூறுகின்றார்.
சம்பவம் குறித்து அவர் தெரிவித்ததாவது கடந்த முதலாம் திகதி வீட்டுக்கு வந்து தேங்காய் பிடுங்கித் தருமாறு ஒருவர் கேட்டார். அவரது வீட்டுக்குச் சென்று தேங்காய் பிடுங்கிக் கொடுத்தேன். அதன் பின்னர் அந்த வீட்டுக்காரரின் மகள் கேட்டதற்கிணங்க அவர் வசித்து வரும் மற்றொரு வீட்டுக்கும் சென்று தேங்காய் பிடுங்கிக் கொடுத்தேன்.
அதன் பின்னர் கூலிக்கான பணத்தை வாங்கிக்கொண்டு போய்விட்டேன்.
நான் தேங்காய் பிடுங்கிய வீட்டாரின் மகளின் நகைகள் காணாமற்போய்விட்டதாகக் கூறி, அந்தப் பழியை என் மீது சுமத்திய பொலிஸார், என்னைக் கைது செய்து கொண்டு தாக்கினார். எனது ஆடையைக்கூட கழற்றி விட்டு அநாகரிகமாக நடந்து கொண்டனர்.
பின்னர் என்னை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அது எந்த இடம் என்று என்னால் அடையாளம் காணமுடியவில்லை. ஓரிடத்தில் என்னைக் கீழே இறக்கிவிட்டு துப்பாக்கி முனையை எனது வாய்க்குள் வைத்துச் சுடப்போவதாக அச்சுறுத்தினர். களவு நகைகளை தரும்படி கூறியே அவ்வாறு அச்சுறுத்தினர்.
நான் நகைகளை எடுக்கவில்லை என்று கூறினேன். நான் அப்பொழுது நின்றிருந்த இடம் எது என்று தெரியுமா என்று கேட்டனர். தெரியாது என்றேன். வன்னிக்குக் கொண்டு செல்வதாகக் கூறினர். பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் என்னை மீண்டும் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் எனது வீட்டாருக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி என்னை அழைத்துச் செல்லும்படி எனது மனைவியிடம் கூறப்பட்டது. அதன் பின்னரே என்னை விடுவித்தனர்.
வெளியேறிய பின்னர் வலி தாங்காமல் தான் சங்கானை வைத்தியசாலையில் 2ஆம்திகதி சிகிச்சைக்காகச் சென்றேன். பின்னர் அங்கிருந்து என்னை யாழ். போதனாவைத்தியசாலைக்கு மாற்றினர். இது தொடர்பில் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.
போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார் தயாநந்தன். முறைப்பாடு செய்யப்பட்டதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளரும் உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பை ஏற்படுத்திய போதும் பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொள்ள முடியவில்லை.