கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைத்து திடீரென கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் ஐந்துபேரும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்ட ஐந்து முன்னாள் போராளிகளின் வழக்கு விசாரணைகளும் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டது.
30 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படத்தபட்டபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றிற்கு இல்லாத நிலையில் அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதாக நீதவான் அறிவித்திருந்தார்.
முருகையா தபேநிந்திரன், ஞானசேகரலிங்கம் ராஜ்மதன், வேலாயுதம் விஜயகுமார், லூயிஸ் மாரியநாயகம் அஜந்தன், காராலசிங்கம் குலேந்திரன் ஆகிய முன்னாள் போராளிகளே இன்றைய தினம் நீதிமன்றில் முன்லைப்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை முன்னாள் போராளிகளின் பெற்றோர் தமது பிள்ளைகள் எந்தவித சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத நிலையில் அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதுசெய்திருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.