கடந்த வியாழக்கிழமை ஒட்டுசுட்டான் சிவநகர் பகுதியில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளித் தம்பதிகளுக்கு வவுனியா நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியுள்ளது.
வவுனியா நீதிமன்றத்தின் நீதிபதி லெனின்குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிபதியால் பிணை அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த புதன்கிழமை இவர்கள் இருவரையும் வவுனியா காவல்துறையினர் கைதுசெய்யவில்லையென ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த போதிலும் நேற்றயதினம் அவர்களே இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
முன்னாள் போராளிகள் என அச்சுறுத்தல் விடுத்த காரணத்தினாலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என அவர்கள் தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
குறித்த தம்பதியினரின் கையடக்கத் தொலைபேசியின் எமி இலக்கம், அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதால் அவர்களை கைதுசெய்ததாக வவுனியாக் காவல்துறையினர் தெரிவித்ததாக சட்டத்தரணி தெரிவித்தார்.
எனினும், குறித்த தம்பதியினரை பிணையில் செல்ல காவல்துறையினர் இணக்கம் தெரிவித்ததன் பின்னரே நீதிபதி இவர்களை விடுதலைசெய்தார்.
அத்துடன், இவர்களின் வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதையடுத்து கிராம சேவையாளரின் உறுதிப்படுத்தல் கடிதத்தினை சமர்ப்பித்து இருவரையும் இன்று வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.