யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட பல்கலைகழக செயற்பாடுகளை முடக்கிய போராட்டத்தை நிறுத்தி, அப்போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் நீதிமன்றில் உள்ள வழக்குகளை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்த நிலையிலும், ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின் படி செயற்பட்டிருக்காத நிலையில், யாழ். பல்கலைகழகத்தின் கற்றல் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை முடக்கி, கொட்டும் மழைக்கும் மத்தியில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இப்போராட்டத்தைத் தொடர்ந்து. தமிழ் அரசியல் தலைமைகள், தாம் இப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக மாணவர்களுடன் இணைந்து போராடுவதாக கூறி, உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதாகக் கூறியிருந்தார்கள்.
இதன்படி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற யாழ். பல்கலைகழக மாணவர்களும் பொது அமைப்புகளும் அரசியல் தலைமைகளும், அரசியல் கைதிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்தனர்.
இந்நிலையில், தாம் மேற்கொண்டுவரும் யாழ். பல்கலைக்கழகத்தை முடக்கிய போராட்டத்தை இடைநிறுத்தி, அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கு, வேறு வடிவங்களை போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்காலத்தில் எவ்வாறான அழுத்தம் கொடுக்க கூடிய போராட்டங்களை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பாக, தமது மாணவர்களுடன் கலந்துரையாடி, அது தொடர்பாக அறிவிக்கப்படும் எனவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.