கைதிகளின் விடுதலைக்காக பிரார்த்தியுங்கள் – அகில இலங்கை சைவ மகா சபை

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். குடாநாட்டில் உள்ள ஆலயங்கள் தோறும் விசேட வழிபாடுகளில் ஈடுபமாறு அகில இலங்கை சைவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இன, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் இணைந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல்கொடுக்குமாறும் சைவ மகா சபை கோரியுள்ளது.

இது தொடர்பாக சைவ மகா சபை விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக தமது விடுதலையை வலியுறுத்தி வந்தனர்.ஆனால் அது சாத்தியமாகாத நிலையில் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தக் கைதிகள் சிறைகளில் வாடுவதால் இவர்களின் குடும்பங்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றனர். குறிப்பாக இவர்களின் பிள்ளைகள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

எனவே, அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைவரும் இணைந்து குரல்கொடுக்க வேண்டும். இவர்களின் விடுதலையை வலியுறுத்தி சைவ மகா சபை இன்று கையெழுத்துப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கின்றது.

இந்தக் கையெழுத்துக்கள் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மற்றும் பௌத்த மதத் தலைவர்களுடன் இணைந்து அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts